அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழிப்பாடங்கள் நீக்கப்படவில்லை – அமைச்சர் பொன்முடி பேட்டி

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால் அதனை நீக்குவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்த அறிவிப்பு வெளியிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி. அவர் பேசியதாவது : “பொறியியல் பாடப்பிரிவுகளை முதன் முதலாக தமிழில் அறிமுகப்படுத்தியதே கலைஞர் அவர்கள் தான். அவர் வழிவந்த திராவிட மாடல் அரசு, தமிழ் வழிப் பாடங்களை நீக்க அனுமதிக்காது.

தமிழ்வழிப் பாடங்கள் நீக்கப்படுவதாக என்னிடமோ, தமிழ்நாடு அரசிடமோ எந்த ஆலோசனையும் பெறாமல் துணைவேந்தர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். நாங்கள் அவரிடம் பேசிய பிறகு தனை திரும்ப பெறுவதாகவும் அறிவித்துவிட்டார்.

தமிழ் வழியில் அனைத்து பாடங்களையும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். தாய் மொழி வழியில் படிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் எண்ணமும் கூட. அதனை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

இப்போது சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடங்கள் மட்டும் தமிழ் வழியில் கற்பிக்கப்பட்டு வருகிறது. மற்ற பாடங்களையும் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் பொறியியல் கல்லூரி மட்டுமல்ல பாலிடெக்னிக் கல்லூரியிலும் தமிழ் மொழி பாடக் கல்வியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது” என கூறினார்.