அதிரடியாக குறைந்த தக்காளி விலை ..மக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டேஇருந்தது .

ஆந்திராவில் ஓரளவிற்கு தக்காளி விளைச்சல் உள்ள நிலையில் பல்வேறு வட மாநில வியாபாரிகளும், ஆந்திராவில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய துவங்கியுள்ளனர். இதனால், ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய தக்காளி, வட மாநிலங்களுக்கு செல்கிறது.

இதனால் தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதையடுத்து, மலிவு விலையில் ரேஷன் கடைகள், தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகத்துறை வாயிலாக தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.85 க்கு விற்பனையாகி வருகிறது. நவீன் தக்காளி விலை ரூ.100 ஆக உள்ளது. கடந்த சில நாட்களாக 90 ரூபாயில் இருந்து வந்த தக்காளி விலை இன்று 5 ரூபாய் குறைந்துள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.