அமலாக்கத்துறை சோதனை குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. 24-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ள இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மத்தியில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று என்பதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஏற்கனவே பிஹார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்றும், நாளையும் 2 நாட்கள் கர்நாடகாவின் பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் 24 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பாஜகவை வீழ்த்த பிஹார், கர்நாடகா என தொடர்ந்து கூட்டப்படக் கூடிய கூட்டம், பாஜக ஆட்சிக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிபாடு தான், அமலாக்கத்துறை அவர்களால் ஏவப்படப்பட்டுள்ளது. ஏற்கனவே வட மாநிலத்தில் இந்த பணியை செய்து கொண்டு இருந்தவர்கள், தற்போது தமிழகத்திலும் இந்த பணியை தொடங்கி உள்ளார்கள்.

அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி வீட்டில், அமலாகத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, புனையப்பட்ட பொய் வழக்கு. 13 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கு. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

அண்மையில் பொன்முடி மீது கடந்த கால ஆட்சியில் சுமத்தப்பட்ட 2 வழக்குகளில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதை வழக்கை சட்ட ரீதியாக அவர் எதிர்கொள்வார். இதற்கெல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் பதில் அளிக்க மக்கள் தயாராக உள்ளார்கள். எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்ப பாஜக செய்து கொண்டு இருக்கும் தந்திரம்தான் இது” என்று தெரிவித்தார்.