அமெரிக்காவின் H-1B விசா பெறுவதில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள இந்தியர்கள்!

அமெரிக்க நாட்டில் பணிபுரிவதற்கு பெறப்படும் H-1B விசா பெறுவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்.

நம்மைச் சுற்றியுள்ள பலரும் தகவல் தொழிநுட்ப நிறுவனங்களில் பணியாற்றுபவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் இருந்த அவர்கள் திடீரென வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்துகொண்டு இருப்பார்கள். குறிப்பாக பெரும்பாலானோர் அமெரிக்காவில் பணிபுரியும் ஆன்சைட் வேலையில் இருப்பார்கள்.

அப்படியான நபர்களுக்காகதான் H-1B விசாவை வழங்குகிறது அமெரிக்கா. அமெரிக்காவில் 2022ஆம் நிதியாண்டில் அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை மூலம் 4.41 லட்சம் H-1B விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 3,20,791 விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இது 72.6 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக சீனாவை சேர்ந்த 5,538 பேரும், கனடாவை சேர்ந்த 4,235 பேரும் H-1B விசா பெற்றுள்ளனர்.

இதன் மூலம் அமெரிக்காவில் H-1B விசா பெறுவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்கள். பல ஆண்டுகளாக 70 சதவீதத்துக்கு அதிகமாக H-1B விசாக்களை இந்தியர்கள் தொடர்ந்து பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.