அமெரிக்காவில் 3 வயது குழந்தை, தன்னுடைய சகோதரியான 1 வயது குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் என்பது புதிதல்ல… சமீபத்தில்கூட, வணிக தளத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயம்பட்டனர். இதில், தெலுங்கானாவைச் சேர்ந்த இளம்பெண் ஐஸ்வர்யாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணம் டியாகோ கவுண்டியில் உள்ள பால்புரூக்கில் 3 வயது குழந்தையே, தன் ஒரு வயதான சகோதரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 வயது குழந்தை, தன்னுடைய வீட்டில் துப்பாக்கியை வைத்து விளையாடி உள்ளது. அப்போது, தவறுதலாக அதே வீட்டிலிருந்த ஒரு வயது சகோதரியின் தலைப்பகுதியில் குண்டு நுழைந்து இறந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து அமெரிக்க காவல்துறை, “காவல் நிலையத்திற்கு குழந்தை போன் செய்ததன் பேரில், நாங்கள் அங்குச் சென்று பார்த்தோம். அப்போது, 3 வயது குழந்தை தவறுதலாக 1 வயது சகோதரியின் தலையில் சுட்டுள்ளது தெரியவந்தது. துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் சுயநினைவின்றி இருந்த குழந்தையை மீட்டு பலோமர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் எற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்” எனத் தெரிவித்துள்ளது.
ஒரு வயது குழந்தையை 3 வயது குழந்தையே சுட்டுக் கொன்றது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.