அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக போட்டியிடும் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் – ஒரே கட்சியில் இரண்டு வேட்பாளர்கள் இடையே போட்டி!

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில் அதே கட்சியில் இருந்து, முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸும் அதிபர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த காலகட்டத்தில் துணை அதிபரா இருந்தவர் மைக் பென்ஸ். கடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் பென்ஸ் முறைகேடு செய்துவிட்டதாக குற்றம்சாட்டினார் டிரம்ப்.

இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். தொடர்ந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பரபரப்பான இந்த அரசியல் சூழலில், குடியரசு கட்சியை சேர்ந்த மைக் பென்ஸும் அதிபர் பதவிக்கு போட்டியிடப்போவதாக தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள அயோவா பகுதியில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் முறைப்படி அமெரிக்க மக்களுக்கு மைக் பென்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதை அறிவிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.