அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு கோடிக்கணக்கில் நன்கொடைஅளித்த இந்திய வம்சாவளி தொழிலதிபர்கள்!

அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடையாக அளித்த இந்திய வம்சாவளி தொழிலதிபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிறந்து இந்தியாவில் படித்து இப்போது பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உலக அளவில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள், மிகப்பெரிய தொழிலதிபர்களாக இருப்பவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு நன்கொடையாக ரூ.10,000 கோடி கொடுத்திருப்பதாக பட்டியல் வெளியாகியிருக்கிறது.

இங்கிலாந்தைச்சேர்ந்த உருக்கு அதிபரும், ஆர்சிலர் மிட்டலின் செயல் தலைவருமான லக்ஷ்மி என். மிட்டல் மற்றும் அவரது குடும்பத்தினர் 2017-ம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு 5 மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கினர். மிட்டல் நிறுவனம் தெற்காசியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் உள்ள முக்கியமான பிரச்சினைகளை புரிந்துகொள்வதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்திய அமெரிக்க தொழிலதிபரும், இசைக்கலைஞருமான சந்திரிகா டாண்டன், ஐஐஎம் அகமதாபாத்தின் முன்னாள் மாணவி. இவர் நியூயார்க் பல்கலை.பொறியியல் கல்வி ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் டாலரை நன்கொடையாக அளித்துள்ளனர்.

இந்திய-அமெரிக்க விஞ்ஞானியான முகுந்த் பத்மநாபன், அதிநவீன பொறியியல் ஆய்வகத்திற்காக கலிபோர்னியா பல்கலைக்கழகத்திற்கு 2.5 மில்லியன் டாலரை பரிசளித்துள்ளார். இவர், ஐஐடி காரக்பூரில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்கில் பிஎஸ் பட்டம் பெற்றவர்.

இந்திய அமெரிக்க தொழிலதிபரும், துணிகர முதலீட்டாளருமான குருராஜ் தேஷ்பாண்டே, ஐஐடி-மெட்ராஸின் முன்னாள் மாணவர். தேஷ்பாண்டே அறக்கட்டளை கனடாவில் உள்ள நியூ பிரன்ஸ்விக் பல்கலைக்கழகத்திற்கு 2.5 மில்லியன் டாலரை புதுமை மற்றும் தொழில்முனைவுக்கான நன்கொடையாக பாண்ட்-தேஷ்பாண்டே மையத்தைத் தொடங்குவதற்கு வழங்கியது.

இந்திய அமெரிக்க தொழிலதிபரும், ஐஐடி-காரக்பூரின் முன்னாள் மாணவருமான வின் குப்தா, லிங்கனில் உள்ள நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் சிறு வணிக மேலாண்மைக்கான பாடத்திட்டத்தை உருவாக்க 2 மில்லியன் டாலரை நன்கொடை அளித்துள்ளார்.

மருத்துவர் கிரண் சி. படேல் மற்றும் அவரது மனைவி பல்லவி படேல் ஆகியோர் 2017-ம் ஆண்டில் புளோரிடா பல்கலைக்கழகத்துக்கு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 30.5 மில்லியன் டாலரை வாரி வழங்கியுள்ளனர்.