அமைச்சராக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜா – தமிழ்நாடு அமைச்சரவையில் நடைபெற்ற மாற்றம் என்ன?

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா

கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. இந்த இரண்டாண்டுகளில் இதுவரை இரண்டு முறை அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக தற்போது அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவந்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான செய்தி குறிப்பில், முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அவர்களை அமைச்சரவையில் சேர்க்கவும். பால்வலத்துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கவும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும். மே 11ம் தேதி டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பொறுப்பேற்றவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிபிரமாணம் செய்துவைக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சராக பொறுப்பேற்றார் டி.ஆர்.பி.ராஜா.

பின்னர், தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது. அதில், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக தங்கம் தென்னரசையும், தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சராக பி.டி.ஆர். பழனிவேல்தியாகராஜனையும், பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜையும், புதிதாக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவை தொழில்துறை அமைச்சராகவும் மாற்றம் செய்து அறிவிப்பட்டிருக்கிறது.