அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை – நெஞ்சுவலியால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி – பைபாஸ் சர்ஜரிக்கு பரிந்துரைத்த மருத்துவர்கள்?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் திடீர் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் சமீபத்தில் வருமாவரித்துறை சோதனை நடத்தியது. இந்நிலையில் நேற்று செந்தில் பாலாஜியின் வீடு, அரசு பங்களா மற்றும் அவரது சகோதரரின் வீடுகளிலும் சோதனை நடத்தியது அமலாக்கத்துறை.

மேலும் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் பல மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்று இரவு விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து விடியற்காலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவரை காரில் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

அப்போது அவர் காரில் வலியில் துடித்தபடி மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்ற காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த செந்தில் பாலாஜியை யாரும் சந்திக்க அனுமதிக்கவில்லை அமலாக்கத்துறை அதிகாரிகள்.

இந்த சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஒமந்தூரர் மருத்துவமனைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். தொடர்ந்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ” அமைச்சர் செந்தில் பாலாஜி நலமாக இருக்கிறார். இது பா.ஜ.கவின் பழிவாங்கும் நடவடிக்கை. இந்த உருட்டல், மிரட்டல்களுக்கு திமுக அரசு அஞ்சாது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்” என்று அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. காரணம் எதுவும் சொல்லாமல் அவரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

உறவினர்கள், நண்பர்கள் யாரிடமும் அதிகாரிகள் எதுவும் சொல்லவில்லை. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து உறுதியாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

கைது நடவடிக்கை என்றால் அதற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எந்த வழக்குக்காக விசாரணை நடத்தப்பட்டது என்பது தொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம். கட்சித் தலைமையுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் கஸ்டடியில் இருப்பதால் முன் ஜாமீன் தாக்கல் செய்ய முடியாத நிலை உள்ளது” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ரகுபதி, “முழுக்க முழுக்க இது மனித உரிமை மீறிய செயல். திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காரணமானவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும். எந்த காரணத்திற்காக அமலாக்கத்துறை வந்தது என தெரிந்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்” என்று அவர் கூறினார்.

இதனை அடுத்து மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன?

வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளது. அதனை அவசர மனுவாக ஏற்று 2.15 மணிக்கு விசாரணை நடத்த இருக்கிறார்கள் நீதிபதிகள்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதால் அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொண்டனர். அதன்பின்னர், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரார் மருத்துவமனை இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.