அமைச்சர் செந்தில் பாலாஜி கைது – அகில இந்திய தலைவர்கள் கண்டனம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததை வன்மையாக கண்டித்துள்ளனர் அகில இந்திய தலைவர்கள்

இரவோடு இரவாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததற்கும், தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக ரெய்டு நடத்தியதற்கும் அகில இந்திய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே “தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருவதற்கு காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது. துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் போன்றவற்றில் மோடி அரசின் வெட்கக்கேடான முயற்சிகள் இவை. அரசியல் எதிரிகளுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகளின் இத்தகைய மோசமான துஷ்பிரயோகம் மோடி அரசாங்கத்தின் அடையாளமாகும்.

இந்த உத்திகள் எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதில் வெற்றியடையாது. மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தைத் தொடரும் உறுதியையும் மட்டுமே அவை வலுப்படுத்துகின்றன.” என தெரிவித்துள்ளார்.

அதேபோல, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி “மத்திய அரசு நிறுவனங்களை பயன்படுத்தி எதிர்கட்சிகளை பாஜக அச்சுறுத்துவது முடிவின்றி தொடர்கிறது. தமிழ்நாட்டின் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு எதிராக நடத்தப்படும் அமலாக்கத்துறை ரெய்டுகளுக்கு கடும் கண்டனங்கள். அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையால், சரிசெய்ய முடியாத பாதிப்பை நம் ஜனநாயகத்துக்கு பாஜக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்திருக்கும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “மத்திய அரசு நிறுவனங்களை பயன்படுத்தி எதிர்கட்சிகளை பாஜக அச்சுறுத்துவது முடிவின்றி தொடர்கிறது. தமிழ்நாட்டின் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு எதிராக நடத்தப்படும் அமலாக்கத்துறை ரெய்டுகளுக்கு கடும் கண்டனங்கள். அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையால் சரிசெய்ய முடியாத பாதிப்பை நம் ஜனநாயகத்துக்கு பாஜக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.

அதேபோல, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் “எதிர்க்கட்சிகள் தலைமை தாங்கும் அரசாங்கங்களுக்கு எதிரான அமலாக்கத்துறையின் இடைவிடாத நடவடிக்கைகளை கண்டிக்கிறேன். செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் ரெய்டு நடத்துவதன் வழியாக, ஜனநாயகத்தன்மையற்ற ஒன்றிய அரசுக்கு எதிரான குரலை ஒடுக்கும் நோக்குடன் தென் மாநிலங்களுக்குள்ளும் தற்போது அமலாக்கத்துறை நுழைந்திருக்கிறது.” என தெரிவித்திருக்கிறார்.

மேலும், சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி “தமிழ்நாட்டின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலைமைச் செயலக அலுவலகத்தில் நடக்கும் ரெய்டுகளுக்குக் கண்டனங்கள். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையை மோடி அரசாங்கம் ஆயுதம் போல பயன்படுத்துகிறது.” என கண்டனம் தெரிவித்துள்ளார்.