அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் – இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் பரபரப்பு!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிகிச்சையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத் துறையினர் கடந்த மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகக் கூறி, அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை என மேகலா தரப்பில் வாதிடப்பட்டது. எதிர்வாதங்களை முன்வைத்த அமலாக்கத்துறை தரப்பு, ஒருவர் நீதிமன்ற காவலில் இருக்கும் போது ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் வாதிட்டது.

வாதங்கள் நிறைவடைந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு – பரத சக்ரவர்த்தி அமர்வு இன்று காலை மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், “செந்தில் பாலாஜியை எந்த சட்ட விதிமுறைகளும் பின்பற்றாமல் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மேலும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் கிடையாது. அதனால், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது செல்லுபடியாகும். இதன் காரணமாக செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம்” என நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கினார்.

அதே அமர்வின் மற்றுமொரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி, “தள்ளுபடி செய்யக்கூடிய மனு இது. செந்தில் பாலாஜி ஒரு நிமிடம் கூட கஸ்டடியில் இல்லை. சிகிச்சை நாட்களை நீதிமன்றம் காவல் நாட்களாக கருத முடியாது.” என்று தீர்ப்பளித்தார். இதனால் இவ்வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி இந்த வழக்கை மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரை செய்வாரா என்பது தெரியவரும்.