அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகம் – உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து!

யூடியூபர் மணீஷ் காஷ்யப்பின் ரிட் மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் “அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில், எதை வேண்டுமானாலும் பரப்பி அமைதியற்ற சூழலை உருவாக்குவதா?” என கேள்வி எழுப்பி ரிட் மனுவை விசாரிக்க மறுத்தனர்.

தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியாக வீடியோ வெளியிட்ட பீகாரைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மணீஷ் காஷ்யப்பை போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

அப்போது தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், மற்றும் பீகார் மாநில அரசின் சார்ப்பில் ஆஜரான வழக்கறிஞர் உள்ளிட்டோர் மணீஷ் காஷ்யப் மீதான குற்றங்கள் குறித்து விரிவாக வாதாடினர்.

அதன்பின் மணீஷ் காஷ்யப் தாக்கல் செய்த ரிட் மனு குறித்து கருத்து தெரிவித்த அமர்வு நீதிபதிகள் “அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில், எதை வேண்டுமானாலும் பரப்பி அமைதியற்ற சூழலை உருவாக்குவதா? இவற்றையெல்லாம் காது கொடுத்து கேட்க முடியாது’ என்று தெரிவித்தனர். மேலும் ‘யூடியூபர்’ மணிஷ் காஷ்யப்பின் ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.