‘அரசுப் பள்ளிகளை கொண்டாடுவோம்’ விழிப்புணர்வு பேரணி

‘அரசுப் பள்ளிகளை கொண்டாடுவோம்’ விழிப்புணர்வு பேரணி

சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில்,‘அரசுப் பள்ளிகளை கொண்டாடுவோம்’ என்ற பெயரில் இன்று முதல்விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின்கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 57 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

இந்த நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ‘அரசுப் பள்ளிகளை கொண்டாடுவோம்’ என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்த பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றிக்கை:

மாணவர் எண்ணிக்கை குறைவு: கல்வி தொடர்பாக தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. ஆனாலும், தொடக்கக் கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சி தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.

எனவே, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் ‘அரசுப் பள்ளிகளை கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியை ஏப்.17 (இன்று) முதல் 28-ம் தேதி வரை நடத்த வேண்டும். அரசின் நலத் திட்டங்கள், அரசுப் பள்ளி மாணவர்களின் வெளிநாடு சுற்றுலா விவரங்களை பாடல்களாக வழங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து ஆசிரியர்களும், குறிப்பாக, மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள் விழிப்புணர்வு பணியில் ஈடுபட வேண்டும். உயர்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு குறித்து எடுத்துரைத்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.