அறுவை சிகிச்சை நிறைவு- அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை

அறுவை சிகிச்சை நிறைவடைந்து. அமைச்சர் உடல்நிலை சீராக உள்ளாதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.

இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அவருடைய இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் இருந்த 4 அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்து செந்தில்பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவக் குழு ஒன்று தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 13-ம் தேதி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத் துறை அன்றிரவே அவரைக் கைது செய்தது. அதைத்தொடர்ந்து, நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு வரும் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று (ஜூன் 21) காலையில் அறுவை சிகிச்சை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 5 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்த நிலையில் மருத்துவமனை தரப்பில் அமைச்சர் நலமுடன் இருப்பதாகக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.