ஆதிபுருஷ் படத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்து சேனா மனு தாக்கல் செய்துள்ளது
புதுடெல்லி: ஓம் ராவத் இயக்கத்தில் நேற்று வெளியான ஆதி புருஷ் படத்துக்கு எதிராக இந்து சேனா அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்து சேனா தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தப் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார்.
ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் நேற்று (ஜூன் 16) உலகமெங்கும் வெளியானது.
இந்நிலையில், ஆதி புருஷ் படத்துக்கு எதிராக இந்து சேனா அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வழக்கைத் தொடர்ந்த விஷ்ணு குப்தாவின் அந்த மனுவில், “ஆதிபுருஷ் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளன. அவற்றை நீக்க வேண்டும் . ராமர், ராமாயணம் மற்றும் இந்து கலாச்சாரத்தை கேலிக்குள்ளாக்கும் வகையில் ‘ஆதிபுருஷ்’ படம் அமைந்துள்ளது. இது பார்வையாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். கடவுள் ராமர் குறித்து தவறான பிம்பத்தைக் கொண்டு சேர்க்கும். ஆகையால் படத்தைத் திரையிட தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆதிபுருஷ் படத்துக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பில்லை. பெரும்பாலான திரையரங்குகளில் காட்சிகளில் கூட்டம் இல்லாமல் இருந்தது என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் படத்தில் கதாபாத்திரங்கள் வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிட்டதற்குப் பொருந்தாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.