ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறும் விவகாரம்: மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு நோட்டீஸ்!

 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்து மணிப்பூர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி, எதிர்க்கட்சிகள் தினந்தோறும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறும் விவகாரம் தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளார். மக்களவையின் வழக்கமான அலுவலை ஒத்தி வைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக கவர்னரை பதவியில் இருந்து நீக்க கோரியும், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக கவர்னர் செயல்படுவதாகவும் நோட்டீஸ் அளித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும், அது குறித்து விவாதிக்க கோரியும் அதிமுக சார்பில் எம்.பி. சி.வி.சண்முகம் மாநிலங்களவையில் நேற்று நோட்டீஸ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.