இணையவழி குற்றங்களைத் தடுக்க காரைக்காலில் சைபர் க்ரைம் பிரிவு தொடக்கம்.!

காரைக்கால் மாவட்ட காவல் துறையில் இணையவழி குற்றத் தடுப்பு (சைபர் கிரைம்) பிரிவு இன்று (ஜூலை 20) முதல் தொடங்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் இணையவழி குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காரைக்கால் காவல் துறையில் இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு இல்லாத காரணத்தால், புதுச்சேரியில் உள்ள இப்பிரிவின் மூலம் வழக்குப் பதிவு, விசாரணை உள்ளிட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதனால் காரைக்காலிலேயே இப்பிரிவு தொடங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளராக கடந்த ஜூன் 24-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட மணிஷ், காரைக்காலில் இணையவழி குற்ற தடுப்பு பிரிவு தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதனடிப்படையில் அப்பிரிவு தொடங்கப்பட்டு இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இணையவழி குற்றத் தடுப்பு பிரிவு அலுவலகத்தை எஸ்.எஸ்.பி மணிஷ் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ”இப்பிரிவு மற்ற காவல் நிலையங்களுக்கும் உதவிகரமாக செயல்படும். இணைய வழியில் நடைபெறக் கூடிய பாலியல் சம்பவங்கள், பொருளாதார குற்றங்கள், வங்கி மோசடிகள் உள்ளிட்ட எந்தவொரு குற்றச் சம்பவங்கள் குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் இப்பிரிவின் மூலம் இணையவழி குற்றங்கள் குறித்து பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களிலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் வாரம் 2 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பாலியல் மற்றும் பதட்டம் ஏற்படுத்தக்கூடிய ( சென்சிடிவ் ) சம்பவங்கள் தொடர்பாக புகார் அளிப்போர் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும்.

குற்றச் சம்பவங்களின் தன்மையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து புகார்களுக்கு விரைந்து தீர்வு காணப்படும். புதுச்சேரியில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையம், காரைக்காலில் உள்ள இப்பிரிவுக்கு தொடர்ந்து தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும். தொலைபேசி எண் மூலமாகவும், நேரடியாகவும் புகார் அளிக்கலாம்.

பின்னாளில் இப்பிரிவு முழு அளவில் இயங்கக் கூடிய காவல் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் ஏ.சுப்பிரமணியன் கூறியது. காவல் ஆய்வாளர் இ.பிரவீன் குமார் தலைமையில், தலைமைக் காவலர் எஸ்.மனமகிழன், காவலர்கள் டி.தினேஷ் குமார், வினோத் குமார் ஆகிய 4 பேர்களுடன் இப்பிரிவு செயல்படத் தொடங்கியுள்ளது.

தொடக்க நிலையில் உள்ள இப்பிரிவு, தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன், கூடுதல் காவலர்களுடன் மேலும் பல நிலைகளில் மேம்படுத்தப்படும் என்றார்.

இ.பிரவீன் குமார் கூறியது: காரைக்காலில் கடந்த ஆண்டு, இணையவழி குற்ற சம்பவங்கள் தொடர்பான பல்வேறு வழக்குகளுக்கு காவல் துறை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளன. எனினும் முழு மூச்சுடன் செயல்படும் வகையில் காரைக்கால் மாவட்டத்துக்கென இப்பிரிவு தனியாக இல்லை என்ற குறை பலருக்கும் இருந்து வந்தது. இந்நிலையில் இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சார்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது காரைக்காலில் உள்ள இப்பிரிவு மூலம் தனியாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.

9489205364 என்ற எண் மூலம் தொடர்பு கொண்டோ, வாட்ஸ் அப் மூலமாகவோ 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம். ஏற்கெனவே சைபர் கிரைம் போர்டல் மூலம் பதிவு செய்த புகார்கள் அதிகம் உள்ளன. முதல் கட்டமாக அதில் நிலுவையில் புகார்களுக்கு தீர்வு காணப்படும். அடுத்தக் கட்டமாக இனி வரக்கூடி புகார்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.