இந்தியாவில் தயாரான முதல் செமி கண்டக்டர் சிப் 2024 டிசம்பரில் வெளியாகும் என்று மத்திய தகவல்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனுடன் இணைந்து கூட்டறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: உலகம் முழுவதும் செமி கண்டக்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது.
எனவே இந்தியாவிலும் அதுபோன்ற தொழிற்சாலையை உருவாக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவு செய்தது. குஜராத் மாநிலத்தில் மைக்ரான் நிறுவனத்தின் செமி கண்டக்டர் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.
4 முதல் 5 செமி கண்டக்டர் தொழிற்சாலைகள் ஓராண்டுக்குள் இந்தியாவில் அமைக்கப்படும். 2024-ம் ஆண்டு டிசம்பருக்குள் இந்தியாவில் தயாராகும் முதலாவது செமி கண்டக்டர் சிப் வெளியாகும். இது மைக்ரான் நிறுவனத்தின் முதலாவது செமி கண்டக்டர் சிப்பாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரான் டெக்னாலஜி செமி கண்டக்டர் சிப் நிறுவனம், செமி கண்டக்டர் தொழிற்சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவுடன் செய்து
கொண்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி குஜராத்தில் 8.25 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் தொழிற்சாலையை மைக்ரான்
நிறுவனம் அமைத்து வருகிறது. இந்தியாவில் அமைக்கப்படும் முதலாவது செமி கண்டக்டர் தொழிற்சாலையாகும் இது.
மத்திய அரசு, குஜராத் மாநில அரசுகளின் ஆதரவுடன் மொத்தம் 275 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் இது அமைகிறது. முதலீட்டுத் தொகையில் மத்திய அரசு 50 சதவீதத்தையும், மாநில அரசு 20 சதவீதத்தையும், மீதமுள்ள தொகையை மைக்ரான் நிறுவனமும் வழங்குகிறது. 2024-ம் ஆண்டு இறுதியில் தொழிற்சாலை செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.