இந்தியாவிலேயே முதன்முறையாக ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் சேவையை கேரள அரசு தொடங்கியிருக்கிறது.
இந்தியாவில் பல்வேறு தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்இணைய சேவையை வழங்கி வருகிறது. ஆனால் அதனுடைய விலைப் பட்டியல் என்பது அனைத்து மக்களும் பயன்படுத்தக்கூடியதாக இல்லை என்பதே உண்மை.
இந்நிலையில், அனைத்து தரப்பு மக்களுக்கும் இணைய சேவை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், ‘கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்’ சேவையை தொடங்கியிருக்கிறது கேரள அரசு.
இதனை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்திருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இதுகுறித்து பேசிய அவர், “கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்” என்பது கேரளா அரசின் மலிவு விலை இணைய சேவை வழங்கும் திட்டம். இதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக அதிவேக இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு டெலிகாம் நிறுவனங்களை விட குறைவான விலையில் அதிவேக இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை 17,412 அரசு அலுவலகங்களுக்கும் 9000 வீடுகளுக்கும் கேரளா அரசின் இந்த மலிவு விலை இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று அவர் கூறினார்.