இந்தியாவில் தனிமனிதனுக்குத் தேவையான நீரின் இருப்பு குறைந்து வருகிறது: மத்திய அரசு தகவல்!

2050-ம் ஆண்டில் இந்தியாவில் தனிமனித வருடாந்திர நீர் இருப்பு சராசரியாக 1219 கியூபிக் மீட்டர் ஆகவும், தனிமனித குடிநீர் தேவை ஆண்டுக்கு 740 கியூபிக் மீட்டராகவும் இருக்கும் என்று தெரிய வந்திருப்பதாக, ஜல் சக்தி துறை இணையமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு பதில் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு, “வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பிருப்பதை மத்திய அரசு உணர்ந்திருக்கிறதா? குடிநீர் தேவை மற்றும் விநியோகத்துக்கான விகிதாச்சாரம் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதா? குடிநீர் பஞ்சம் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இக்கேள்விக்கு மத்திய ஜல் சக்தி துறை இணையமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு அளித்த பதில்: “நீராதாரத்தோடு கூடிய வானிலை, புவியியல் அமைப்பு போன்ற காரணிகளை அடிப்படையாக வைத்தே நாட்டின் எந்தவொரு பகுதியிலும் வருடாந்திர சராசரி நீர் இருப்பு கணக்கிடப்படுகிறது. ஆனாலும் ஒரு தனிமனிதனுக்குத் தேவையான சராசரி நீர் இருப்பு ஒரு நாட்டின் மக்கள் தொகையின் அடிப்படையில் மாறுபடுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தனிமனிதனுக்குத் தேவையான நீரின் இருப்பு குறைந்துகொண்டே வருகிறது. இதற்குக் காரணம் அதிகரித்துவரும் மக்கள் தொகைதான். அதிகப்படியான வெப்பநிலை, நீர் ஆவியாகும் வேகம் அதிகரித்திருப்பது போன்றவையும் நீர்ப்பற்றாக்குறைக்கு காரணமாக இருக்கின்றன.

இந்தியாவில் நீர் இருப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையில் மத்திய நீர் ஆணையம் 2019-ல் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக நீர்வள மேம்பாட்டுக்கான தேசிய ஆணையம் நடத்திய ஆய்வின்படி, 2050-ம் ஆண்டில் இந்தியாவில் தனிமனித வருடாந்திர நீர் இருப்பு சராசரியாக 1219 கியூபிக் மீட்டர் ஆகவும், தனிமனித குடிநீர் தேவை ஆண்டுக்கு 740 கியூபிக் மீட்டராகவும் இருக்கும் என்று தெரிய வந்திருக்கிறது.

இதுதவிர தமிழகத்தின் சென்னை, வேலூர் உட்பட இந்தியாவின் 24 நகரங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு நிலத்தடி நீர்மட்டம் மற்றும் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்யும் திறன் ஆகியவற்றை மத்திய நிலத்தடி நீர் வாரியம் மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான நிலத்தடி நீர் இருப்பு உள்ளது என்ற ஆறுதலான செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நீர் மேலாண்மை மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் வருவதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளை அதிகமாக்குவது, தேக்கிய நீரைப் பாதுகாப்பது, நீர்நிலைகளைப் பாதுகாப்பது போன்ற விஷயங்களை மாநில அரசுகளே மேற்கொள்கின்றன. இந்த விஷயங்களில் மாநில அரசுகளின் முயற்சிக்கு துணைபுரியும் விதமாக பல்வேறு திட்டங்கள் மூலம் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்குகிறது.

இதன் ஒருபகுதியாக மாநில அரசுகளுடன் இணைந்து, 2024-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் அனைத்து கிராமப் புறங்களிலும் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.மத்திய அரசின் இன்னொரு பிரத்யேகத் திட்டத்தின்கீழ், குஜராத், ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் நிலத்தடி நீர் குறைவாக உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், நாட்டில் ஒட்டுமொத்தமாக நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் வகையில், ‘மழையைப் பிடிப்போம்’ என்ற வாசகத்தைத் தாங்கிய ஜல் சக்தி அபியான் என்ற மழை நீர் சேகரிப்புத் திட்டம் 2019-ம் ஆண்டு 256 மாவட்டங்களில் தொடங்கப்பட்டு, தற்போது நாடு முழுக்க இத்திட்டம் திருப்திகரமான வகையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மழை நீரை சேகரித்து, குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று பதிலளித்திருந்தார்.