இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலிய தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!

அரசுமுறைப் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய தொழில் நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுத்தார்.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ஆஸ்திரேலியா நாட்டிற்குச் சென்றுள்ளார் பிரதமர் மோடி. இறுதி நாள் பயணமான நேற்று ஆஸ்திரேலிய தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளைச் சந்தித்தார். அப்போது, அவர்களுடன் பிரதமர் மோடி பேசியது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பொருத்தவரை, தகவல் தொழில்நுட்பம், நிதிதொழில்நுட்பம், தொலைபேசி, செமிகண்டக்டர்ஸ், விண்வெளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், கல்வி, மருந்து உற்பத்தி, சுகாதாரம், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு, கனிமவளங்கள், விவசாயம், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் நீங்கள் முதலீடுகளை செய்ய முடியும்.

இந்தியாவில் தொழில் தொடங்குவது தற்போது எளிதாக்கப்பட்டுள்ளது. புகார்களைக் குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்நிய நேரடி முதலீட்டுக்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.” என பிரதமர் மோடி பேசியதாக அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.