அரசுமுறைப் பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.819 கோடி முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளில் உள்ள தொழில்நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பதற்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சிங்கப்பூர் பயணம் முடிந்து தற்போது ஜப்பானில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.கடந்த 23-ந் தேதியன்று சிங்கப்பூர் சென்ற அவர் தனது இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது ஜப்பானில் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். கிட்டத்தட்ட 200 ஜப்பானிய நிறுவனங்களில் தலைமை அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாபெரும் வர்த்தக மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உலகின் மிகப்பெரிய பொருளாதார நகரங்களில் ஒன்றாக, உலக புகழ்பெற்ற 500 நிறுவனங்களில் 51 நிறுவனங்களின் தலைமையகங்கள் இயங்கும் நகராக டோக்கியோ விளங்குகிறது. 2-ம் உலக போரில் தாக்குதலுக்கு உள்ளானாலும் உழைப்பும், செயல்திறனும் கொண்டு உயர்ந்து நிற்கும் டோக்கியோ நகருக்கு வந்திருப்பதை பெருமையாக கருதுகிறேன்.
நாடு தழுவிய போக்குவரத்து, உயரமான வானளாவிய கட்டிடங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள், ஒரு நகரம் எப்படி அமைய வேண்டும் என்பதை டோக்கியோ எடுத்துக்காட்டுகிறது. நகரத்தின் அனைத்து எரிசக்தி தேவைகளும், ஹைட்ரஜன், காற்றாலை மின்சாரம் மற்றும் சூரியஒளி எரிசக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் பூர்த்தி செய்யப்படுவதை கண்டு நான் வியந்து போகிறேன். இது எனது கனவுகளின் அகலத்தை பெரிதாக்குகிறது. எங்கள் தமிழ்நாட்டை எப்படி உருவாக்க நினைக்கிறோமோ, அந்த கனவுப்பரப்பை நான் இங்கு பார்க்கும் காட்சிகள் அதிகப்படுத்தி இருக்கிறது. இதை எனது வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாது.
தெற்காசியாவிலேயே, முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். நிசான், தோஷிபா, யமஹா, கோமாட்ஸூ, ஹிட்டாச்சி போன்ற மிகப்பெரும் நிறுவனங்கள், தங்கள் உற்பத்தி திட்டங்களை தமிழ்நாட்டில் அமைத்துள்ளன. ஜப்பான் நாட்டின் மிகப்பெரும் வங்கிகளான பேங்க் ஆப் டோக்கியோ, மிட்சுமிஷி, மிசுஹோ வங்கி போன்ற வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு துறை சார்ந்த முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடத்தி, இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 2 லட்சத்து 95 ஆயிரத்து 339 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே ரூ.5,596 கோடி முதலீடு மற்றும் 4,244 பேருக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், 5 ஜப்பானிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
ஜப்பானிய நிறுவனங்களுக்கு என்னுடைய சில கோரிக்கைகளை வைக்க விரும்புகிறேன். ஜப்பானிய நிறுவனங்கள் பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த துறைகளில் மட்டுமே முதலீடுகளை மேற்கொள்கின்றன. இந்நிலையை சற்றே விரிவுபடுத்தி, உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டங்களிலும் முதலீடு மேற்கொள்ள வரும்படி அழைப்பு விடுக்கிறேன். உங்களது தொழிற்சாலைகளை தமிழகத்தில் அமைக்கும்போது அதுதொடர்பான தலைமை அலுவலகத்தையும் எங்கள் மாநிலத்திலேயே அமைக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் இளைய சக்தியை வளமிக்கதாக நாங்கள் மாற்றிக்கொண்டிருக்கிறோம். மிகச்சிறந்த திறமைசாலிகள் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாடு அரசும், திறந்த மனத்தோடு அனைத்து தொழில் நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் அரசாக இருக்கிறது. நிர்வாக உதவி, மனித ஆற்றல் ஆகிய இரண்டும் இணைந்து கிடைக்கும் மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை ஜப்பானிய நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2024 ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாபெரும் நிகழ்வுக்கு நீங்கள் அனைவரும் வர வேண்டும்.” என அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த 6 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதாவது, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், கியோகுட்டோ சாட்ராக் நிறுவனத்திற்கும் இடையே காஞ்சீபுரம் மாவட்டம், மாம்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 13 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.113 கோடியே 90 லட்சம் முதலீட்டில் டிரக் வாகனங்களுக்கான பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், மிட்சுபா நிறுவனத்திற்கும் இடையே திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள 4 மற்றும் 2 சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் மிட்சுபா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன தொழிற்சாலையை ரூ.155 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஷிமிசு நிறுவனத்திற்கும் இடையே கட்டுமானம், கட்டுமான பொறியியல் மற்றும் அதன் தொடர்புடைய வணிகத்தை தமிழ்நாட்டில் மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், கோயீ நிறுவனத்திற்கும் இடையே ரூ.200 கோடி முதலீட்டில் பாலிகார்பனேட் தாள் தயாரித்தல், கூரை அமைப்புகள் தயாரித்தல், கட்டுமானதத்துறையில் பயன்படுத்த எலக்ட்ரானிக் கூறுகளுக்கான எக்ஸ்ட்ருஷன் லைன்கள் ஆகியவற்றை தயாரிப்பதற்கான தொழிற்சாலை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சடோ-ஷோஜி மெட்டல் வர்க்ஸ் நிறுவனத்திற்கும் இடையே ரூ.200 கோடி முதலீட்டில் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் கட்டுமான உபகரணங்கள் துறையில் பயன்படுத்தப்படும் உயர்தர இரும்பு பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், டப்ல் நிறுவனத்திற்கும் இடையே ரூ.150 கோடி முதலீட்டில் சோலார், இரும்பு ஆலைகள், விண்வெளி மற்றும் குறைக்கடத்தி தொழில்களுக்கான துருப்பிடிக்காத இரும்பு சிறப்பு நெகிழ்வான குழல்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மொத்தம் ரூ.818 கோடியே 90 லட்சம் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.