இந்தியாவில் 3 நாட்களில் ரூ.31 கோடி வசூல் – மிஷன் இம்பாசிபிள் 7..!

டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மிஷன்: இம்பாசிபிள் டெட் ரெகனிங் (பாகம் 1)’ இந்தியாவில் வெளியான மூன்று நாட்களில் ரூ.31 கோடி வசூலித்துள்ளது.

ஹாலிவுட் ஆக்‌ஷன் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ சீரிஸ் படங்களுக்கு எப்போதும் இடம் உண்டு. 1996 முதல் வெளியாகி ஆக்‌ஷன் ரசிகர்களை வியக்க வைக்கும் இதன் முந்தைய பாகங்கள் உலகம் முழுவதும் பெரும் வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ ஏழாவது பாகமான ‘மிஷன்: இம்பாசிபிள் டெட் ரெகனிங் (பாகம் 1)’ கடந்த 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

டாம் க்ரூஸ் மற்றும் ‘மிஷன் இம்பாசிபிள்’ படங்களுக்கு இந்தியாவில் பெரும் ரசிகர் கூட்டம் இருப்பதால் இப்படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. படமும் நேர்மறை விமர்சனங்களைப் பெற்று வருவதால் இந்தியாவில் இப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.31 கோடி வசூலித்துள்ளது. நேற்று மட்டும் இப்படம் ரூ.9.32 கோடி வசூலித்துள்ளது. முதல் நாள் அன்று ரூ.12 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.9.5 கோடியும் இப்படம் வசூலித்தது. இதே நிலை தொடர்ந்தால் இந்த வார இறுதியில் இப்படம் ரூ.60 கோடி வசூலைத் தாண்டும் என்று சினிமா வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். உலக முழுவதும் ‘மிஷன்: இம்பாசிபிள் டெட் ரெகனிங்- 1’ இதுவரை 6.3 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளதாகவும், அமெரிக்காவில் மட்டும் இப்படம் 2.3 கோடி டாலர்கள் வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.