இந்திய ட்ரக் டிரைவர்களை வரவேற்கும் ஹங்கேரி!

ஹங்கேரி நாட்டில் ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான டிரக் டிரைவர்களுக்கு அங்கே வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கிறது.

2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பிற்கு பிறகு ஹங்கேரி நாட்டின் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் அங்கே தொழில்நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணியாளர்கள் கிடைக்காமல் போனதால், உற்பத்தி பாதிக்கப்பட்டு, அது நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்க தொடங்கியிருக்கிறது.

அதனால், மற்ற நாடுகளில் இருந்து ஹங்கேரி நாட்டிற்கு தொழிலாளர்கள் குடியேறூவதற்காக விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது, இந்தியாவில் உள்ள டிரக் டிரைவர்களுக்கு அங்கே பணி புரிவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது அந்நாடு.

ஏற்கனவே குறைந்த அளவிலான இந்திய டிரக் டிரைவர்கள் அங்கே பணிபுரிந்து வருகின்றனர். ஹங்கேரியில் இருந்து பிரான்சு மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கு அவர்கள் டிரக்குகளை ஓட்டி வருகின்றனர். மேலும், இந்திய ஓட்டுநர்கள் மீது அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை, அவர்கள் சரியான நேரத்தில் சரக்குகளை கொண்டுபோய் சேர்ப்பது, மரியாதையாக நடந்துகொள்வது, தங்களுடைய டிரக்கை சுத்தமாக பராமரிப்பது, மேலும் நேர்மையான கூலியை பெற்றுக்கொள்வது என இந்திய ஓட்டுநர்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.

அதனால், தற்போது இந்தியாவில் இருந்து ஹங்கேரிக்கு டிரக் டிரைவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்வதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகமாகி இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் வரை அங்கே 8 ஆயிரம் டிரக் டிரைவர்களுக்கான வேலை காலியாக இருப்பதாக அந்நாட்டு செய்திதாள் மூலம் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், ஹங்கேரிநாட்டில் புத்தாபெஸ்ட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பன்யாய் & பார்ட்னர்ஸ் கன்சல்டிங் நிறுவனம், இந்தியாவில் இருந்து ஹங்கேரிக்கு டிரக் டிரைவர்களை அழைத்துச் செல்வதற்கு பெங்களூரில் ஒரு வேலைவாய்ப்பு அலுவலகத்தை அமைத்திருக்கிறது.

அதன் மூலம் முதல் கட்டமாக 500 டிரக் டிரைவர்களை ஹங்கேரியில் செயல்படும் அப்பல்லோ டயர்ஸ், பாடான் டிரான்ஸ்போர்ட், சுசூகி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியமர்த்த இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் அது 800 ஆக அதிகரிக்கும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதுவரை கஜகஸ்தான், மங்கோலியா, வியட்னாம் ஆகிய நாடுகளில் இருந்து தான் டிரக் டிரைவர்களை அந்த நிறுவனம் வேலைக்கு எடுத்து வந்தது. ஆனால், அவர்களை ஒப்பிடும்போது இந்திய டிரக் டிரைவர்கள் தான் சிறந்தவர்கள் என அந்நிறுவனமே சமீபத்தில் தெரிவித்திருக்கிறது.

இப்போது நடக்கும் ஆட்சேர்ப்பு முகாமின் மூலம், பஞ்சாபை சேர்ந்த டிரக் டிரைவர்கள் அதிகம் பேர் ஹங்கேரி நாட்டிற்கு வேலைக்கு செல்வதற்கு ஆர்வம் செலுத்தி வருவதாக பன்யாய் & பார்ட்னர்ஸ் கன்சல்டிங் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.