அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல் இன்று மாலை குஜராத்தில் கரையை கடக்கிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அம்மாநில அரசு.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்தப் புயல் இன்று மாலை 4 மணிக்கு குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச், பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கடரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களின் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 74 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
புயல் கரையை நெருங்குவதால் நேற்றிலிருந்து காற்றுடன் மழை பெய்து வருகிறது. சில மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று 130 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படையின் 15 குழுக்கள், 12 மாநில பேரிட மீட்புக்குழுக்கள், மாநில சாலை மற்றும் கட்டுமானத்துறையின் 115 குழுக்கள், மின்சாரத்துறையின் 397 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக குஜராத் நிவாரண ஆணையர் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை வடகிழக்கு நோக்கி நகர்ந்து சவுராஷ்டிரா மற்றும் கட்ச், குஜராத்தின் மந்த்வி- பாகிஸ்தானின் கராச்சி அருகில் உள்ள ஜக்காவ் துறைமுகம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தின் போர்பந்தர், ராஜ்கோட், மொர்பி, ஜுனாகாத், சவுராஷ்டிரா, வடக்கு குஜராத் பகுதிகளில் அதிதீவிர மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.