இரவு படுக்கைக்கு செல்லும் முன் நாம் சாப்பிடும் சில உணவுகளும் நம் தூக்கம் கெட காரணமாக அமைகின்றன.
இரவு படுக்கையில் படுத்த சில நிமிடங்களில் தூங்கி விடும் வரம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இன்று பெரும்பாலானோர் நிம்மதியான இரவு தூக்கம் இன்றி பலவிதமான உடல்நல கோளாறுகளுக்கு ஆளாகி வருகின்றனர். வேலைப்பளு, மன அழுத்தம், ஸ்மார்ட் போன் மற்றும் டிவி பார்த்து கண்களுக்கு பிரிவு கொடுக்காமல் இருப்பது என்று பல காரணங்கள் இருந்தாலும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் நாம் சாப்பிடும் சில உணவுகளும் நம் தூக்கம் கெட காரணமாக அமைகின்றன. காலை அரசரை போலவும், இரவில் யாசகரை போலவும் உணவு சாப்பிட வேண்டும் என்பது நம் பண்பாடு. ஆனால் தற்கால இயந்திர வாழ்க்கையில் நேரமின்றி காலை யாசகரை போலவும், இரவில் அரசரை போலவும் வயிறு நிரம்ப சாப்பிட்டு வருகிறோம்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்ல இரவு தூக்கம் அவசியம். இல்லையென்றால் மனநிலை மாற்றங்கள், இதய நோய், எரிச்சல், எடை அதிகரிப்பு, எடை இழப்பு , மந்த நிலை உள்ளிட்ட பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இரவு தூக்கம் கெட பல காரணங்கள் இருந்தாலும் அவை அனைத்திலும் மிகவும் பொதுவான ஒன்று படுக்கைக்கு செல்லும் முன் சில உணவுகளை சாப்பிடுவது. நிம்மதியான உறக்கத்திற்கு உணவு பழக்கத்தையும் கவனத்தில் கொள்ள நிபுணர்கள் கூறுகின்றனர்.
தூங்க செல்லும் முன் தவிர்க்க வேண்டிய சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கும் சில உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
வெள்ளரிக்காய்: இரவு நேரங்களில் வெள்ளரிக்காய்களை சாப்பிட கூடாது என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். ஒருசில மூடநம்பிக்கைகள் காரணமாக இரவில் வெள்ளரியை சாப்பிட கூடாது என்று பெரியவர்கள் சொல்வதாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இரவில் வெள்ளரிகளை தவிர்க்க சொல்வதற்க்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. வெள்ளரிகள் கக்கூர்பிட்டாசின் எனப்படும் ஒரு தனிமம் (Element) நிரம்பியுள்ளது. இது செரிமான சிக்கல்களை ஏற்படுத்தி நல்ல இரவு தூக்கத்தில் குறுக்கிட்டு நிம்தியான தூக்கத்தை கெடுக்கிறது.
காஃபி : குறிப்பாக இரவில் நீங்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை இருந்தால், உங்களுக்கு காஃபின் அடங்கிய பானங்களின் முக்கியத்துவத்தை அறீவீர்கள். இருப்பினும், காஃபி போன்ற அதே பானங்கள் உங்கள் தூக்கத்தை கெடுக்கின்றன. காஃபின் அடங்கிய பானங்களை பருகுவதால் ஒருவர் சுமார் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை விழித்திருக்க முடியும் என்று கூறப்படுகிறது. எனவே மாலை நேரங்களில் குடிக்கும் காஃபி தவிர்த்து இரவு உணவிற்கு முன் அல்லது பின் காஃபி குடிப்பதால் உங்கள் தூக்கத்தை இழக்க நேரிடும்.
சாக்லேட் : சாக்லேட்டை விரும்பதவர்கள் நம்மில் யாரும் இருக்க முடியாது. சாக்லேட்டின் சுவை தரும் உற்சாகம் அலாதியானது. இருந்தாலும் உற்சாகம் தரும் அதே சாக்லேட் இரவில் சாப்பிட்டால் அது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். சாக்லேட்டுகளில்சர்க்கரை மற்றும் கலோரிகள் மட்டுமின்றி காஃபினும் ஒரு மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. ஏற்கனவே நாம் பார்த்தபடி காஃபினை இரவில் எடுத்து கொள்வது தூக்கத்தை கெடுக்கும் என்பதால் சாக்லேட்டை தவிர்ப்பது நல்லது.
உலர் பழங்கள் : பொதுவாக உலர் பழங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று. இவை எடை இழப்புக்கு, மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஆற்றலாக இருக்க, சருமத்தின் தரத்தை மேம்படுத்த என பல வகைகளிலும் உதவும் என்பதை நாம் அறிவோம். ஆனால் இரவு நேரத்தில் உலர் பழங்களை சாப்பிடுவது உங்கள் தூக்கத்திற்கு நல்லதல்ல. ஏனென்றால் அவற்றில் உள்ள அதிக நார்ச்சத்து, குறைந்த நீர் சத்து உள்ளிட்டவை செரிமான ஆரோக்கியத்தை பாதிக்க கூடும். எனவே உங்களது அமைதியான தூக்கத்தை தடுக்கும் வாய்ப்பு உள்ளது.