உடற்பயிற்சி செய்யும்போது HEART ATTACK ? நிபுணர்கள் தரும் விளக்கம்.!

சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சியின்றி இத்தனை காலம் வாழ்ந்து விட்டு, திடீரென்று 30, 40 வயதில் ஜிம்முக்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக மாற்றுகிறேன் என்ற பெயரில் மிக தீவிரத் தன்மை வாய்ந்த பயிற்சிகளை செய்யக் கூடாது.

உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே ஒரு சிலர் உயிரிழப்பது நம்மிடையே சந்தேகங்களையும், உடற்பயிற்சி குறித்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து இதய நோய் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் விளக்கம் அளிக்கையில், “உடற்பயிற்சிகளை தீவிரமாக மேற்கொள்வதே பிரச்சனைகளுக்கு காரணம்’’ என்று குறிப்பிட்டனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல உங்கள் உடல் வலிமை மற்றும் திறனுக்கு அதிகப்படியான பயிற்சிகள் செய்வது உங்கள் உயிருக்கு கூட ஆபத்தாக முடியலாம்!

உதாரணத்திற்கு அளவு கடந்த ஓட்ட பயிற்சி, மிக அதிகமாக எடை தூக்குதல் போன்ற பயிற்சிகளை செய்யக் கூடாது. அதிலும் நமது வயதுக்கு ஏற்ற பயிற்சிகளை நாம் செய்ய வேண்டும். சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சியின்றி இத்தனை காலம் வாழ்ந்து விட்டு, திடீரென்று 30, 40 வயதில் ஜிம்முக்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக மாற்றுகிறேன் என்ற பெயரில் மிக தீவிரத் தன்மை வாய்ந்த பயிற்சிகளை செய்யக் கூடாது.வெகு காலமாக பயிற்சி இன்றி இருந்த நம் உடலை முதலில் பயிற்சிக்கு தயார் செய்ய வேண்டும். பொதுவாக வேகமான நடை, ஜாக்கிங், சைக்கிளிங், ஸ்விம்மிங் போன்ற பயிற்சிகளை வாரத்திற்கு 150 நிமிடங்களுக்கு குறையாமல் செய்யலாம். இதற்கு மேற்பட்ட தீவிரத்தன்மை உடைய பயிற்சிகள் எல்லோருக்கும் ஆபத்தாக அமைந்து விடாது என்றாலும், ஏற்கனவே இதய நோய் பிரச்சனை இருப்பவர்களுக்கு அது சிக்கலுக்குரியதாக மாறுகிறது.

இதயத்தை தாக்கும் அபாயங்கள் : இதய நோய் அபாயங்களை நீங்கள் 100% மிகச் சரியாக கணித்து விட முடியாது. அதே சமயம், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், மிகுதியான உடல் எடை போன்றவை எச்சரிக்கைக்கு உரிய விஷயங்களாகும். அதிலும் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது, உடல் இயக்கமின்றி இருப்பது போன்றவை நம் ஆபத்துகளை அதிகரிக்கின்றன.

குடும்பத்தின் மருத்துவ வரலாறு முக்கியம் : நீங்கள் ஜிம்முக்கு சென்று தீவிரத் தன்மை உடைய பயிற்சிகளை செய்ய இருக்கிறீர்கள் என்றால், அதற்கு முன்னதாக மருத்துவ நிபுணர் ஒருவரை சந்தித்து உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்த அடிப்படை புரிதல்களை தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக உங்கள் குடும்பத்தினர் யாருக்காவது இதய நோய் இருந்தால் நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால் போன்ற பரிசோதனைகள் மற்றும் ட்ரெட்மில் பரிசோதனையும் செய்யப்படலாம்.

என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது : நீங்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர் என்றால் உடற்பயிற்சிக்கு முன்னதாக உங்களை வார்ம் அப் செய்யவும், பயிற்சிக்கு பின்னர் கூல் டவுன் செய்யவும் மிக அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மிகுந்த வெப்பம் உடைய சமயத்தில் பயிற்சிகள் செய்வதை தவிர்க்க வேண்டும். உங்கள் உடல் வலுவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை சவாலாக ஏற்றுக் கொண்டு பயிற்சி செய்யும் நடவடிக்கையை கண்டிப்பாக கைவிட வேண்டும்.