உலக தாய்ப்பால் வாரம் 2023 : பால் கொடுக்கும் தாய்மார்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

உங்கள் செல்லக் குழந்தைக்கு புரதம், கால்சியம், இரும்புச்சத்து, மினரல்கள் என ஊட்டச்சத்துகள் அவசியம். அதற்காக, இந்த சத்து நிறைந்த உணவுகளை பச்சிளம் குழந்தை நேரடியாக சாப்பிட முடியுமா? இவற்றை குழந்தைக்கு கொண்டு சேர்க்கும் வலிமையான சப்ளையர் தாய்ப்பால் மட்டுமே.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது. இப்படி உலகம் முழுவதும் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம், அதனால் தாய்மார்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என இந்நாளில் அதன் நன்மைகளை எடுத்துரைப்பதே நோக்கமாக இருக்கும்.

பொதுவாக பிரசவ கால உடல் பலவீனத்தில் இருந்து உடல் மீண்டு வர வேண்டும். இதற்கு சத்தான உணவு மற்றும் தகுந்த ஓய்வு ஆகியவை அவசியம். ஆனால், செல்லக் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தாய்மார்களுக்கு இருப்பதால் தொடர்ச்சியான ஓய்வு குறித்து நினைத்துகூட பார்க்க முடியாது. ஏதோ குழந்தை தூங்கும் சமயத்தில், நாமும் கொஞ்சம் தூங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

அதேசமயம், உங்கள் செல்லக் குழந்தைக்கு புரதம், கால்சியம், இரும்புச்சத்து, மினரல்கள் என ஊட்டச்சத்துகள் அவசியம். அதற்காக, இந்த சத்து நிறைந்த உணவுகளை பச்சிளம் குழந்தை நேரடியாக சாப்பிட முடியுமா? இவற்றை குழந்தைக்கு கொண்டு சேர்க்கும் வலிமையான சப்ளையர் தாய்ப்பால் மட்டுமே.நீங்கள் சாப்பிடக் கூடிய உணவுகள் உங்களுக்கு மட்டுமல்லாமல், குழந்தைக்கும் தாய்ப்பாலாக சென்று சேருகிறது என்பதை மறக்கக் கூடாது. அதேசமயம், தாய்ப்பால் சுரப்பை தூண்டக் கூடிய உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகள் :
இறைச்சி, பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்கள், மீன், முட்டை, பீன்ஸ், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றை தாய்மார்கள் அதிகம் உட்கொள்ள வேண்டும். இவை உடலுக்கு தேவையான புரதச்சத்தை வழங்குகின்றன. மற்றும் தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கின்றன.

வளரும் குழந்தையின் இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் போன்ற தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நீங்கள் உலர் பழங்கள் சாப்பிட வேண்டும். காய்கறிகளை மிகுதியாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மஞ்சள் மற்றும் அடர் பச்சை நிற காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். கேழ்வரகு, ஓட்ஸ் போன்ற முழு தானிய உணவுகள், கோதுமை பிரட் போன்றவற்றை சாப்பிடலாம்.

சூப்பர் ஃபுட்ஸ் :
ப்ளூபெர்ரி, சிவப்பு அரிசி, ஆரஞ்சு, சால்மன் மீன், பாலக்கீரை, பூண்டு போன்ற உணவுகள் தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கும். எப்போதும் காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள் :
புதிய தாய்மார்கள் சத்தாக சாப்பிட வேண்டிய அதேவேளையில், ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பது மிக, மிக முக்கியமானதாகும். குறிப்பாக அசைவ உணவுகளில் மசாலா மற்றும் காரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.