உலக வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்ட இந்தியர்!

உலக வங்கியின் 14வது தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற காலகட்டத்தில் இருந்து உலக வங்கியின் தலைவராக அமெரிக்கர்கள்தான் நியமிக்கப்பட்டு வந்துள்ளனர். அந்த வரிசையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா தற்போது உலக வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர் அஜய் பங்கா(63). பின்னர் 2007ம் ஆண்டில் இருந்து அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உலக வங்கியின் தலைவர் பதவிக்கு அஜய் பங்காவை பரிந்துரை செய்திருந்தார்.

25 உறுப்பினர்களைக் கொண்ட உலக வங்கியின் செயற்குழு அஜய் பங்காவை உலக வங்கியின் 14வது தலைவராக நியமித்துள்ளது. வருகிற ஜூன் 2ம் தேதியில் இருந்து அந்த பொறுப்பை ஏற்கிறார் அஜய் பங்கா.

நிதி மேலாண்மை நிபுணரான அஜய் பங்கா 2020 – 2022 காலகட்டத்தில் International Chamber of Commerce-ன் கெளரவ தலைவராக இருந்திருக்கிறார். மேலும் மூன்று வாரங்களில் 39 ஆயிரம் மைல் தூரம் பயணம் செய்து 8 நாடுகலில் 96 அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து நிதித்துறை சார்ந்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

உலக வங்கியின் தலைவராக மட்டும் அல்லாமல், International Bank for Reconstruction and Developmentன் செயல் இயக்குநராகவும், International Development Association-ன் செயற்குழு தலைவராகவும் அவர் செயல்பட இருக்கிறார். இந்தியாவில் பிறந்து வளர்ந்த ஒருவர், உலக வங்கியின் தலைவராகி இருப்பது இந்தியர்களிடையே பெருமிதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.