ஊடகங்களை குறிவைத்து தாக்குவதை நிறுத்துங்கள் : உலக நாடுகளுக்கு ஐ.நா.பொதுச்செயலாளர் அறிவுரை!

உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து பக்கங்களில் இருந்தும் ஊடகங்களை குறிவைத்து தாக்குவதை நிறுத்தங்கள் என உலக நாடுகளுக்கு ஐ.நா.பொதுச்செயலாளர் அறிவுறுத்தி இருக்கிறார்.

30வது உலக ஊடக சுதந்திர தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதுகுறித்து ஊடக சுதந்திரம் குறித்து ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் ஆண்டானியோ தெரிவித்திருப்பதாவது, “உலகம் முழுவதும் 30வது உலக ஊடக சுதந்திர தினம் அனுசரிக்கப்பட்டு வரும் இந்த வேளையில், உலக நாடுகள் ஊடகங்களை குறிவைத்து தாக்கும் சம்பவங்களை நிறுத்த வேண்டும். கடந்த 2022ம் வருடத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 50% அதிகரித்து இருக்கிறது. உலகம் முழுவதும் 55 ஊடகவியலாளர்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர்.

World press freedom day

உலக நாடுகள் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் எந்தளவுக்கு நசுக்குகிறார்கள் என்பது ரஷ்யாவே உதாரணம். ரஷ்யாவின் சட்டப்படி ராணுவம் குறித்த தகவல்களை ஊடகத்தில் வெளியிட்டால் 15 வருட சிறை தண்டனை அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் வால்ஸ்ட்ரீட் ஜர்னலின் ஊடகவியலாளர் ஈவான் கெர்ஸ்கோவிச் என்பவரை கடந்த மார்ச் மாதம் கைது செய்துள்ளனர்.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வேலைபார்க்கும் ஊடகவியாளர் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண் ஊடகவியலாளர்கள் மோசமான தாக்குதலுக்குள்ளாகின்றனர். உண்மையின் பக்கம் நிற்கும் ஊடகவியாளர்களின் பக்கம் இந்த உலகமும் நிற்க வேண்டும். தவறான தகவல்களையும் திட்டமிட்டு பரப்பப்படும் புனைவுகளையும் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் களத்தில் இறங்கி வேலை செய்யும் ஊடகவியாளரின் மூலமாகதான் முடியும். ஊடக சுதந்திரம் பறிக்கப்படும் நாட்டில் ஜனநாயகமும் கேள்விக்குரியாகும்” என அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.