என்எல்சி விரிவாக்கப் பணி: விளைநிலங்களில் பயிர்கள்அழிப்பு : 500-க்கும் மேற்ப்பட்ட போலீஸார் குவிப்பு!

சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் கையகப்படுத்திய நிலத்தில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணி, விளைநிலங்களில் உள்ள நெல் பயிரை அழித்து தீவிரமாக நடந்து வந்து வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்புக்கு 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக கத்தாழை ,கரிவெட்டி மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களை என்எல்சி நிர்வாகம் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியுள்ளது. இதில் இழப்பீடு முழுமையாக வழங்கவில்லை எனவும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாங்க வேண்டும், மாற்று குடியிருப்பு மற்றும் கடந்த காலங்களில் (2006 முதல் 2013 வரை நிலத்தை கையகப்படுத்தியதற்கு) ரூ.6 லட்சம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையின் காரணமாக பல்வேறு பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இதில், ஒரு சில பொதுமககள், விவசாயிகள் மறுத்து வந்தனர். இதனால், அரசியல் கட்சி தலைவர்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இதன் தொடர்ச்சியாக நேற்று (ஜூலை 25) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், என்எல்சி நிர்வாகம், விவசாயிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று (ஜூலை.26) காலை வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணிக்காக என்எல்சி இந்தியா நிறுவனம் 30-க்கும் மேற்பட்ட ராட்ச மண் வெட்டும் இயந்திரங்கள் கொண்டு வந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் அணை போடும் பணி நடைபெற்றது. இதில் விளைநிலங்களில் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் அழிக்கப்பட்டு, அதில் அணைகள் போடப்பட்டன.

விழுப்புரம் சரக டிஐஜி. ஜியாவுல் ஹக், கடலூர் எஸ்.பி ராஜாராமன் ஆகியோர் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், தண்ணீர் பீச்சி அடிக்கும் இயந்திரம், தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பாதுகாப்புடன் வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்றது.

இது குறித்து தகவல் அறிந்து பாமகவினர் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சேத்தியாதோப்பு குறுக்கு ரோட்டில் சாலை மறியல் செய்ய முயன்றபோது போலீஸார் அவர்களை கைது செய்து சேத்தியாதோப்பு தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர். அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.