என்னது பிராட்வேயில் வசதிகள் இல்லாத பேருந்து நிலையமா!

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி, தூய்மையான கழிப்பறை, மேற்கூரை, மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையின் முதன்மை வணிக சாலையாக கடந்த 19-ம் நூற்றாண்டில் உருவெடுத்த ‘போபாம்ஸ் பிராட்வே’ இன்றளவும் அரசியல், இலக்கியம், வணிகம், ஆன்மிகம், மருத்துவம் என பல்வேறு துறைகளின் தலைமை பகுதியாக விளங்குகிறது.

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி, தூய்மையான கழிப்பறை, மேற்கூரை, மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையின் முதன்மை வணிக சாலையாக கடந்த 19-ம் நூற்றாண்டில் உருவெடுத்த ‘போபாம்ஸ் பிராட்வே’ இன்றளவும் அரசியல், இலக்கியம், வணிகம், ஆன்மிகம், மருத்துவம் என பல்வேறு துறைகளின் தலைமை பகுதியாக விளங்குகிறது.

குறிப்பாக, சென்னை உயர் நீதிமன்றம், ராஜா அண்ணாமலை மன்றம், பர்மா பஜார், பிளாஸ்டிக் பொருட்களுக்கான நாராயண முதலி தெரு, சேலைகளின் மொத்த சந்தையான குடோன் தெரு, தங்க நகைகள் மற்றும் அனைத்து வித பொருட்களும் கிடைக்கும் காசி செட்டி தெரு என பிரதான வணிகப் பகுதியாக திகழ்கிறது பிராட்வே.

டந்த 2002-ம் ஆண்டு வரை தென் மாவட்டங்கள் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் பிராட்வேயில் இருந்துதான் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயம்பேட்டுக்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டது.

அதன்பிறகு, மாநகர பேருந்துகள் மட்டும் பிராட்வேயில் இருந்து இயங்கி வருகின்றன. தற்போது ஆவடி, அனகாபுத்தூர், கேளம்பாக்கம், கே.கே.நகர், சைதாப்பேட்டை, ஐயப்பன்தாங்கல், திருநின்றவூர், வள்ளலார் நகர், தண்டையார்பேட்டை என சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்து செல்லும் வகையில் 600-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அருகிலேயே மெட்ரோ ரயில் நிலையம் இருந்தாலும்கூட, பிராட்வே பேருந்து நிலையத்தின் மவுசு இன்னும் குறையவில்லை.
ஆனால், அடிப்படை வசதியை பொருத்தவரை பிராட்வே பேருந்து நிலையத்தில், பல ஆண்டுகளாக பயணிகள் பரிதவிக்கும் நிலையே உள்ளது. ‘‘இங்கு மேல்தட்டு மக்கள் பெரும்பாலும் வருவது இல்லை என்பதாலேயே அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் சுணக்கம் காட்டுகின்றனரோ’’ என்ற கேள்வியையும் பயணிகள் வேதனையுடன் முன்வைக்கின்றனர்.

பயணி அசோக்: உறவினர் வீடு சவுகார்பேட்டையில் இருப்பதால், சிறு வயதில் இருந்தே பிராட்வே பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கிறேன். ஆனால், இந்த பாரம்பரியமிக்க பேருந்து நிலையத்தின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இங்கு குடிநீர் வசதி இல்லை. அதனால், பெரும்பாலான மக்கள் கடைகளில் விற்கும் பாட்டில் குடிநீரைதான் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

அடுத்ததாக, அறிவிப்பு பலகைகளில் எழுதப்பட்டுள்ள வழித்தட எண், செல்லும் இடம் குறித்த விவரம் ஆகியவை அழிந்துகொண்டே வருகின்றன. நேரக் காப்பாளர் அறை முதல் தாய்மார்கள் பாலூட்டும் அறை வரை சுவரொட்டிகளே சூழ்ந்திருக்கின்றன.

இங்கு 6 இலவச கழிப்பிடங்கள் உள்ளன. அவை ஓரளவு தூய்மையாக இருக்கின்றன. ஆனால் அவ்வப்போது கட்டண வசூல் நடக்கிறது. கடை நடத்துவோர் நடைபாதையை ஆக்கிரமித்து நடக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றனர். மேற்கூரை முற்றிலும் சேதமான நிலையில் உள்ளது. இதனால், மழைக்காலங்களில் ஒதுங்க முடிவதில்லை. மழை பெய்தால், வளாகம் முழுவதும் நீர் தேங்கிவிடும்.

மழைக்காலம் நெருங்குவதால், உடனுக்குடன் மழைநீர் வடிவதற்கும், தேங்கும் நீரை அகற்றுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
போதிய அளவில் மின்விளக்குகள் இல்லாததால், இரவில் இருளாக இருக்கிறது. பிரகாசமாக இருக்கும் வகையில், எல்இடி விளக்குகளை அமைக்க வேண்டும்.

பெயர் வெளியிட விரும்பாத ஓட்டுநர்கள்: பிராட்வே பேருந்து நிலையம் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், ஓடி வந்து ஏறும் பயணிகளுக்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்துடனேயே பேருந்தை இயக்க வேண்டியுள்ளது. எனவே, சாலையை சீரமைக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். எங்களுக்கும் குடிநீர் பிரச்சினை இருக்கிறது. இங்குள்ள ஓட்டல்களில்தான் குடிநீர் பாட்டிலை நிரப்பி எடுத்துச் செல்கிறோம். ஓட்டுநர்களுக்கு தரமான ஆர்.ஓ. குடிநீர் வழங்க வேண்டும். கழிப்பறையை தூய்மையாக பராமரிக்க வேண்டும். மாநகர போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஓய்வு அறைகள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபற்றி மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பிராட்வே பேருந்து நிலையம் அமைந்துள்ள இடம் முற்றிலும் சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ கட்டுப்பாட்டில் உள்ளது. அதேநேரம், எங்களால் இயன்ற வகையில் பேருந்து வருகை குறித்த ஒலி அறிவிப்பு போன்றவற்றை செய்து கொடுத்துள்ளோம்’’ என்றனர்.

பேருந்து நிலைய சீரமைப்பு குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் கூறும்போது, ‘‘பிராட்வே பேருந்து நிலையத்தை, சர்வதேச தரத்தில் மேம்படுத்த தீவிரம் காட்டி வருகிறோம். நிதி பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால், இத்திட்டம் சாத்தியப்படாமல் இருந்தது.

தற்போது மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளிட்டவற்றின் மூலம் பெறப்படும் நிதியை கொண்டு, ரூ.900 கோடியில் 21 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் பேருந்து நிலையம் நவீனப்படுத்தப்பட உள்ளது. அதில் வாகன நிறுத்தம், திரையரங்கம் உள்ளிட்டவை இடம்பெறும். இதற்கு விரைவில் டெண்டர் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.