என் மாநிலம் பற்றி எரிகிறது ; உதவி செய்யுங்கள் – ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்

மணிப்பூரில் நடக்கும் கலவரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம். “என் மாநிலம் பற்றி எரிகிறது ; உதவி செய்யுங்கள்” – ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மணிப்பூரில் உள்ள மெய்டேய் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் அமைப்பினால் ஒற்றுமை ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலம் டோர்பங் பகுதியில் வந்துகொண்டு இருந்தபோது, பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடிக்கவும், மணிப்பூர் மாநிலமே இப்போது கலவர பூமியாக காட்சி அளிக்கிறது.

வன்முறை காரணமாக மணிப்பூரின் 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் மொபைல் இண்டர்நெட் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், “எனது மாநிலம் பற்றி எரிகிறது உதவி செய்யுங்கள்.” என சில புகைப்படங்களையும் அதனுடன் பகிர்ந்திருக்கிறார்.

வன்முறையை கட்டுப்படுத்த இந்திய ராணுவமும், அசாம் ரைஃபிலும் செயல்பட்டு வருகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் மாநில முதலமைச்சரன பிரேன் சிங்குடன் தொலைபேசியில் பேசி நிலைமை குறித்து கேட்டறிந்தார். மேலும் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.