ஒடிசாவில் ஏற்பட்ட கோர இரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நேற்று இரவு ஒடிசாவில் நடந்த பயங்கர இரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர். அதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஒடிசா மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின், தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ் நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திட விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் திருமதி அர்ச்சனா பட்நாயக், ஆகியோர் கொண்ட குழு விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு விரைந்து செல்ல முதல்வர் அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (3.6.2023) ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும், அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகழும் ரத்து செய்யப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்” அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இரயில் விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக காயமடைந்த 50 பேருக்கு சென்னையில் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.