ஒரே ஒரு கொய்யாப்பழத்துல இவ்வளவு சத்து இருக்கா…? கண்டிப்பா தவறாம வாங்கி சாப்பிடுங்க..!

குறைந்த கொழுப்புச்சத்து ,கொலஸ்ட்ரால், அதேசமயம் அதிக நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்த கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

கொய்யாவில் ஏராளமான சத்துக்களும் நிரம்பியுள்ளது. வைட்டமின் சி -யின் சிறந்த ஆதாரமாக விளங்கும் கொய்யாக்காயில் அதிக உணவு நார்ச்சத்து காணப்படுகிறது. எனவே கொய்யாக்காய் இதயத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதோடு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைக்க உதவுகிறது.

டயட்டில் இருக்கும் நபர்களுக்கு கொய்யாக்காய் சிறந்த தேர்வாக அமைகிறது. ஆன்டி ஆக்சிடன்டுகள், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்த கொய்யா ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், இதில் ஆரஞ்சு பழத்தை காட்டிலும் நான்கு மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது.

100 கிராம் கொய்யா பழத்தில் 68 கலோரிகள், 14 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 5 கிராம் நார்ச்சத்து, 2.6 கிராம் புரோட்டின், 0.9 கிராம் கொழுப்புச்சத்து, 228.3 மில்லி கிராம் வைட்டமின் சி, 624 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ, 49 மைக்ரோகிராம் போலேட், 417 மில்லி கிராம் பொட்டாசியம் மற்றும் 22 மில்லி கிராம் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் காணப்படுகிறது.

ஏராளமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி ஆக்சிடன்டுகளும் நிறைந்த கொய்யாப்பழத்தை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்:

1.கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆரோக்கியமான சருமத்திற்கு காரணமான கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.

2.கொய்யாப்பழத்தில் காணப்படும் வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்தி, வயது காரணமாக ஏற்படும் கண் கோளாறுகளை தவிர்க்க உதவுகிறது.

3.நாம் ஏற்கனவே கூறியபடி கொய்யாப்பழத்தில் உணவு நார்ச்சத்து அதிகமாக காணப்படுவதால் இது மலச்சிக்கல், வயிற்று உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகளை எளிதாக தடுக்கிறது.

4.கொய்யாப்பழத்தில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்டுகள் செல்களுக்கு ஏற்படும் சேதங்களில் இருந்து அதனை காத்து நாள்பட்ட நோய்களை தடுக்கிறது.

5.அடுத்தபடியாக கொய்யாப்பழத்தில் இருக்கக்கூடிய நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக பராமரிக்கிறது. இதன் காரணத்தால் கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஒரு சிறந்த பழமாக அமைகிறது.

6.கொய்யாப்பழத்தில் குறைந்த சாட்சுரேட்டட் ஃபேட் மற்றும் கொலஸ்ட்ரால் காணப்படுவதாலும், அதிக நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இருப்பதாலும் இது இதயத்தின் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கிறது.

மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

அலர்ஜி: ஒரு சிலருக்கு கொய்யாப்பழம் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்களுக்கு கொய்யாப்பழத்திற்கு அலர்ஜி இருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள்.

பூச்சிக்கொல்லி: பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படாத கொய்யாப்பழங்களை முடிந்த அளவு சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

பழுத்த கொய்யாப்பழம்: முழுமையாக பழுத்த கொய்யாப்பழம், அதே சமயம் அதிகமாக பழுத்தோ அல்லது சேதமடைந்தோ இருக்கக் கூடாது.