ஒரே நாளில் 80 மில்லியன் பார்வைகளை பெற்று ‘சலார்’ டீசர் சாதனை!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 80 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம், செப். 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகிறது.

நேற்று (ஜூலை 6) அதிகாலை 5 மணியளவில் ‘சலார்’ டீசரை படக்குழு வெளியிட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளை பெற்ற இந்த டீசர், 24 மணி நேரத்தில் 80 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. 24 மணி நேரத்துக்குள் அதிக பார்வைகளை குவித்த ஒரே இந்திய திரைப்பட டீசர் என்ற பெருமையையும் ‘சலார்’ டீசர் பெற்றுள்ளது.

இந்தியாவில் யூடியூபில் 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் ஐந்து டீசர்களில் மூன்று டீசர்கள் பிரபாஸ் நடித்த படங்களாகும். ‘ஆதிபுருஷ்’ (68.9 மில்லியன்), ‘கேஜிஎஃப் 2’ (68.83 மில்லியன்) மற்றும் ‘ராதே ஷ்யாம்’ (42.6 மில்லியன்) ஆகிய படங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.