ஒவ்வொரு புதன் கிழமையும் காவல் உயர் அதிகாரிகள் பொதுமக்களை சந்திக்க வேண்டும்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!

ஒவ்வொரு புதன் கிழமையும் காலை முதல் மாலை வரை பொதுமக்களை சந்தித்து புகார் மனுக்களை பெற்று அது தொடர்பான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டிருக்கிறது.

வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் நடைபெறும். இதில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் துறை அதிகார்கள் கலந்துகொள்வார்கள். மக்களிடம் மனுக்களை பெற்று உடனே அதற்கான தீர்வை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார். இது நடைமுறையில் இருந்து வரும் உத்தரவு.

இந்நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகளும் வாரத்தில் ஒருநாள் மக்களிடம் புகார் மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்டு பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டுமென புதிய அரசாணையை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.

அந்த அரசாணையில், “ மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிய வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்கள் வாரந்தோறும் புதன் கிழமை அன்று காலை முதல் மாலை வரை ஆணையகரம் மற்றும் எஸ்.பி. அலுவலகங்களில் பொதுமக்களை சந்தித்து, அவர்களிடம் புகார் மனுக்களை பெற்று, அது தொடர்பான விசாரணை நடத்தவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.