ஓசூரில் கோவக்காய் சாகுபடி அதிகரிப்பு..!

நிலையான விலை, சந்தை வாய்ப்பால் ஓசூரில் கோவக்காய் சாகுபடி அதிகரிப்பு.

நிலையான விலை, சந்தை வாய்ப்பு உள்ளதால், ஓசூர் பகுதியில் கோவக்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், 3 ஆண்டுகள் வரை பலன் அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் ஏரி, குளம் உள்ளிட்ட நீராதாரங்கள் மற்றும் விளை நிலத்தில் உள்ள வேலிகளில் படர்ந்து கொடிகளில் காய்த்து தொங்கும் கோவக்காயைக் கிராம மக்கள் தங்கள் சமையலுக்கு பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் நீர் ஆதாரங்களில் இக்கொடிகளைப் பார்ப்பது அரிதாகியுள்ளது. தற்போது, மருத்துவ குணங்கள் நிறைந்த கோவக்காயின் பயன்பாடு நகரப்பகுதியில் அதிகரித்துள்ளது.

இதையடுத்து, ஓசூர், பாகலூர், கெலவரப்பள்ளி, கெலமங்கலம் பகுதிகளில் பந்தல் கொடி காய்கறிகளைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் கோவக்காயை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் கோவக்காய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்குச் சந்தை வாய்ப்பு கைகொடுத்தும் வருகிறது.

விலையைப் பொறுத்த வரை ஆண்டு முழுவதும் கிலோ ரூ.25-க்கு குறையாமல் இருப்பதால், இதைச் சாகுபடி செய்வதில் ஓசூர் பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: மருத்துவ குணம் நிறைந்த கோவக்காயில் கருங்கோவை, மூவிரல் கோவை, ஐவிரல் கோவை உள்ளிட்ட வகைகள் உள்ளன. ரத்த சுத்தி, சரும பாதிப்பு, கண் நோய், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றுக்கு கோவக்காய் சிறந்த மருந்தாக உள்ளது. நடவு செய்து 60 நாளில் கொடிகள் படரத் தொடங்கி 70 நாள் முதல் காய்கள் அறுவடைக்குக் கிடைக்கும்.

ஆண்டுக்குச் சராசரியாக ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. கேரள, கர்நாடக மாநிலத்துக்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். உள்ளூரிலும் விற்பனை வரவேற்பு உள்ளது. தற்போது, ஒரு கிலோ ரூ.40 வரை விலை கிடைக்கிறது. சொட்டு நீர் பாசனம் மூலம் குறைந்த தண்ணீர், மருந்து செலவு குறைவு மற்றும் ஒரு முறை நடவு செய்தால் 3 ஆண்டுகள் வரை பலன் கிடைக்கிறது.

பருவ நிலைக்கு ஏற்ப வாரத்துக்கு 2 முறை அறுவடை செய்வதால் நல்ல லாபம் கிடைக்கிறது. இந்த மாதம் கோவக்காய் சாகுபடிக்கு ஏற்ற பருவம் என்பதால், ஓசூர் பகுதியில் அதிக பரப்பளவில் விவசாயிகள் கோவக்காய் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.