கஞ்சா கடத்திய வழக்கில் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய சிங்கப்பூர் அரசு!

கடந்த 2013ம் ஆண்டு சிங்கப்பூரில் கஞ்சா கடத்திய சிங்கப்பூர் தமிழர் தங்கராஜ் சுப்பையாவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருக்கிறது சிங்கப்பூர் அரசு.

2013ம் ஆண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு ஒரு கிலோ கஞ்சா கடத்தியதாக சிங்கப்பூர் காவல்துறையினர் தங்கராஜ் சுப்பையாவை கைது செய்திருந்தனர். கஞ்சாவை கைமாற்றுவதற்கு தங்கராஜ் சுப்பையா ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2018ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

கஞ்சா கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிப்பதற்கான குறைந்தபட்ச அளவை விடவும் தங்கராஜ் இரண்டு மடங்கு அதிகமாக வைத்திருந்ததாக அவர் மீதான மரண தண்டனையை நீதிமன்றம் உறுதிசெய்தது. இந்நிலையில் கடந்த ஐந்தாண்டுகளாக அவருக்கு விதித்த தூக்கு தண்டனயை ரத்து செய்யக்கோரி தங்கராஜ் சுப்பையாவின் குடும்பத்தினர் சட்டப்போராட்டம் நடத்தினர்.

மேலும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், ஐக்கிநாடுகள் அவையின் மனித உரிமைகள் அமைப்பு, தங்கராஜ் சுப்பையாவுக்கு விதித்த தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சிங்கப்பூர் அரசுக்கு கோரிக்கை வைத்தன. இறுதியாக தங்கராஜ் சுப்பையாவின் குடும்பத்தினர் சிங்கப்பூர் அரசிடம் கருணை மனு அளித்தனர். ஆனால், எதற்கு செவிசாய்க்காத அரசு, ஏப்ரல் 26ம் தேதி அவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருக்கிறது. அவருக்கு இப்போது 46 வயதாகிறது. அவரது தாயும் சகோதரியும் தொடர்ந்து அவரது விடுதலைக்காக போராடி வந்த நிலையில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் உண்டாக்கி இருக்கிறது.

சிங்கப்பூரை பாதுகாக்கும் அரசின் பல நோக்கங்களில் மரணதண்டனை அவசியம் என தீர்க்கமாக நம்புகிறது சிங்கப்பூர் அரசாங்கம். ஆனால், சிங்கப்பூரின் அண்டை நாடான, தாய்லாந்து கஞ்சா வர்த்தகத்தை சட்டபூர்வமாக்கியுள்ளது. அதேபோல மலேசியா, கடுமையான குற்றங்களுக்கான கட்டாய மரண தண்டனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால், சிங்கப்பூர் மட்டுமே இன்னும் விடாப்பிடியாக மரண தண்டனையை ஆதரித்து வருகிறது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.