கண்ணீர் மல்க தனது ஓய்வை அறிவித்த வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால்..

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடங்க மூன்று மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தமிம் இக்பால் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நேற்று வங்கதேசம் தோல்வியை தழுவி இருந்தது. இந்த நிலையில், ஓய்வு பெறுவதாக தமிம் அறிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் மல்க ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் தனது 16 ஆண்டு கால கிரிக்கெட் கரியருக்கு அவர் விடைகொடுத்துள்ளார். அவரது இந்த திடீர் அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

“இதுதான் எனக்கான முடிவு. நான் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அதற்காக முயற்சியும் செய்தேன். இந்தத் தருணத்தில் இருந்து நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இந்தப் பயணத்தில் என் மீது நம்பிக்கை வைத்த சக வீரர்கள், பயிற்சியாளர்கள், வங்கதேச கிரிக்கெட் வாரியம், எனது குடும்பத்தினர் என அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள்தான் எனது ஊக்கம். என் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை தொடங்குகிறேன். அதற்கு உங்கள் பிரார்த்தனைகள் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

34 வயதான தமிம் இக்பால், கடந்த 2007-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 70 டெஸ்ட், 240 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 15,205 ரன்கள் எடுத்துள்ளார். 37 ஒருநாள் போட்டிகளில் வங்கதேச அணியை வழிநடத்தி அதில் 21 வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.