கருவின் வளர்ச்சிக்கு உதவும் சிறுதானியங்கள்

சிறிதளவு சாப்பிட்டாலும், வயிறு நிரம்பிய உணர்வைத் தரும் சிறுதானியங்கள் உடலின் ஆரோக்கியத்துக்கும், கருவின் வளர்ச்சிக்கும் உதவும்.

கர்ப்பிணிகள் தங்களது உணவுப் பட்டியலில் சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்’ என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சிறுதானியங்களில் புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், போலேட், நியாசின், பாந்தோத்தேனிக் அமிலம், வைட்டமின் பி, ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பல சத்துகள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு அவசியம் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள்.

சிறுதானியங்களில் உள்ள இரும்புச்சத்து, ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தும். நார்ச்சத்து, கர்ப்பகாலத்தில் ஏற்படும் மலச்சிக்கலைத் தடுக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கும். குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிகரிக்கும். வயிறு வீக்கம், வாயு மற்றும் தசைப்பிடிப்புகள் போன்ற பிரச்சினைகளை நீக்கும். கால்சியம், போலேட் ஆகிய சத்துக்கள் கருவின் வளர்ச்சிக்கு உதவும். மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

கர்ப்பிணிகள் மட்டுமின்றி, கருத்தரிக்க முயற்சிப்பவர்களும் சிறுதானிய உணவை சாப்பிட வேண்டும். சிறுதானியத்தை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளும்போது கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை படிப்படியாகக் குறையும். சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள் உள்ளுறுப்புகளின் கொழுப்பைக் குறைப்பதுடன், மாதவிடாய் சுழற்சியையும் ஒழுங்குப்படுத்தும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தைக் குறைக்க சிறுதானியங்களில் உள்ள ‘போலேட்’ என்ற ஊட்டச்சத்து உதவும். குழந்தையின் மூளை மற்றும் முதுகுத்தண்டுவட வளர்ச்சிக்கும் போலேட் அவசியம். கர்ப்பிணிகள் தினமும் 400 மைக்ரோ கிராம் அளவு போலேட் எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில் சிசுவின் வளர்ச்சிக்கு ‘போலிக் ஆசிட்’ முக்கியம். இது நரம்புக்குழாய் சார்ந்த குறைபாடுகள் உட்பட சில பிறவிக் குறைபாடுகளின் அபாயத்தைக் குறைக்கும்.

கர்ப்ப காலத்தில், பெண்கள் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதற்கான சில வழிகள்:

தினை, சாமை, வரகு என எந்த வகை சிறுதானியமாக இருந்தாலும், அதை 2 பங்கு தண்ணீரில் அரிசியைப் போல் சமைக்க வேண்டும்.

சிறுதானியங்களைக் கொண்டு கஞ்சி தயாரித்து சாப்பிடலாம்.

சூப் தயாரிக்கும்போது, சிறுதானியங்களை தனியாக வேகவைத்து அதில் சேர்க்கலாம்.

சாதமாக சாப்பிட விரும்பாதவர்கள், சிறுதானியத்தைப் பயன்படுத்தி தின்பண்டங்கள் தயாரித்தும் உண்ணலாம்.

காய்கறிகள், பருப்பு ஆகியவற்றுடன் சேர்த்து சமைத்து காலை, மதியம், இரவு நேர உணவாக எடுத்துக்கொள்ளலாம். சிறிதளவு சாப்பிட்டாலும், வயிறு நிரம்பிய உணர்வைத் தரும் சிறுதானியங்கள் உடலின் ஆரோக்கியத்துக்கும், கருவின் வளர்ச்சிக்கும் உதவும்.