கர்நாடகாவில் இன்றுடன் முடிவடைகிறது தேர்தல் பிரச்சாரம் : மே 10 தேதி வாக்குப்பதிவு ; இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தேசிய கட்சிகள்!

கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளில் வருகிற மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான பரபரப்பு பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது.

கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 24ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் களத்தில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் 223 வேட்பாளர்களும், பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், ஜனதாதளம் சார்பில் 209 வேட்பாளர்களும், பகுஜன் சமாஜ் சார்பில் 133 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இதுதவிர சுயேட்சையாக 918 வேட்பாளர்கள் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

ஏற்கனவே ஆளும் கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும், எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியும் நேருக்கு நேர் போட்டியிடுகிறது. இவர்களுடன் தேவகவுடாவின் ஜனாதளம் கட்சியின் மூன்றாவதாக போட்டியிட கர்நாடகாவில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், ஸ்மிருதி இரானி, தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட 98 அமைச்சர்கள் கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடி கடந்த 29ம் தேதியில் இருந்து கிட்டத்தட்ட 7 நாட்கள் கர்நாடகாவில் மொத்தம் 31 மாவட்டங்களில் 18 பொதுக்கூட்டங்கள், 5 திறந்தவெளி வேன் பிரச்சாரம் என மொத்தம் 28 தொகுதிகளில் 36 கி.மீ தூரம் பயணம் செய்து பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

அதேபோல காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தீரிவர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதோடு மூன்றாவது கட்சியாக போட்டியிடும் ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேவ கவுடா பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் தேர்ந்தல் நடத்தை விதிமுறைகளின்படி இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. 6 மணிக்கு பின்பு தொகுதியில் ஓட்டுரிமை இருக்கும் தலைவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல், நட்சத்திர பேச்சாளர்களும் 6 மணியுடன் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து, மூன்று கட்சிகளின் தலைவர்களும் இன்று இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். அதன்பிறகு, நாளை வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை ராகுல்காந்தி பெங்களூரு நகரின் கன்னிங்ஹாம் சாலையில் உள்ள கஃபே காபி டேவுக்கு ராகுல் காந்தி சென்றார். மேலும் பிஎம்டிசி பேருந்து நிறுத்தத்தில், கல்லூரி செல்லும் மற்றும் பணிபுரியும் பெண்களை சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் அவர்களுடன் பிஎம்டிசி பேருந்தில் ஏறி, பிஎம்டிசி மற்றும் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் அனைத்து பெண்களுக்கும் இலவச பேருந்து பயணத்திற்கான காங்கிரஸ் உத்தரவாதம் குறித்து அவர்களிடம் பேசினார். குடும்பத் தலைவிகலான பெண்களுக்கு மாதம் ரூ.2000 அளிக்கும் உத்தரவாதம் குறித்தும் அவர் அவர்களிடம் பேசினார். பெண்கள் போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் விலைவாசி உயர்வு தங்கள் வரவு செலவுத் திட்டங்களைப் பற்றி அவரிடம் சொன்னார்கள்.

கர்நாடகாவில் யார் அடுத்த ஆட்சியை பிடிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு கட்சியினரிடமும் மக்களிடமும் ஏற்பட்டிருக்கிறது. மே 10ம் தேதி வாக்குப் பதிவு அதனை முடிவு செய்யும்.