கழிவறையில் செல்போனை பயன்படுத்துகிறீர்களா? இதனால்தான் பெரும்பாலான நோய்கள் வருகின்றன

நாம் சிறிய வயதில் அறிவியல், சமூக அறிவியலில் fundamental needs என்னென்ன என படித்திருக்கிறோம். அதில் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு ஆகிய மூன்றுதான் இன்றியமையாத தேவைகளாகும்.

ஆனால் இன்று உணவு இல்லாவிட்டாலும் இருப்பார்கள். செல்போன் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு செல்போன்கள் நம் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டன. ஸ்மார்ட்போன்கள் வருவதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட பட்டன் போன்கள், தொலைபேசிகள் எல்லாம் பேசுவதற்கும் ஒருவருக்கு முக்கிய தகவலை சொல்லவும்தான் பயன்பட்டன.

ஆனால் ஸ்மார்ட் ஆன்ட்ராய்டு ஃபோன்கள் தற்போது பேசுவதற்கு மட்டும் இல்லாமல் நம் பொழுதுபோக்கிற்கும் உகந்ததாக மாறிவிட்டது. செல் ஃபோன் இல்லாமல் சொல் இல்லை என்ற அளவுக்கு உள்ளது. சிறிய குழந்தை கூட ஆன்ட்ராய்டு ஃபோன்களை ஆபரேட் செய்வதும் தவறான பழக்கம் என்ற போதும் நாம் பெருமை பீற்றுவதும் உள்ளது. இந்த போனை ஆபரேட் செய்ய கற்றுக் கொள்ளும் குழந்தையின் புத்தி கூர்மையை வேறு விதத்தில் பயன்படுத்த யாரும் முயற்சிப்பதில்லை. இந்த செல்போன் மூலம் மெயில் அனுப்புவது, வாட்ஸ் ஆப் மூலம் ஆவணங்களை அனுப்புவது, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கட்டத்தில் செல்போன் இருக்கிறது.

போற இடங்களுக்கு எல்லாம் செல்போன் எடுத்து செல்கிறோம். டிவி இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. செல்போன் ரிப்பேர் ஆகிவிட்டால் அப்படியே ஒரு கை உடைந்துவிட்டது போல் தவிப்பார்கள். இரவு சீக்கிரம் உறங்கும் பழக்கத்தையும் இந்த செல்போன்கள் கபளீகரம் செய்துவிட்டன. அது போல் காலையிலும் ஊருக்கெல்லாம் குட் மார்னிங் மெசேஜ் போட்டு செல்போனில்தான் விழிப்பார்கள்.

கிச்சன், படுக்கை அறை, மொட்டை மாடி, பால்கனி என எங்கும் எடுத்துச் செல்கிறார்கள் என்றால் கழிப்பறைக்கு கூடவா செல்போனை எடுத்துச் செல்வார்கள்!!! அந்த பாத்ரூமில் செல்போன், ஹெட் போன் எடுத்துக் கொண்டு அரை மணி நேரமானாலும் வருவதே இல்லை.

வாகனம் ஓட்டும் போது செல்போனை பயன்படுத்தினால் நம் கவனம் எப்படி சிதறுகிறோ அதே போல் டாய்லெட்டுக்குள் போனை எடுத்துச் சென்றால் நிறைய நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கழிவறைக்கு சென்று வந்த பிறகு கைகளை கழுவுவதே கிடையாது. சில நேரங்களில் அசுத்தமான இடங்களில் செல்போனை வைத்திருப்போம். இதனால் பாக்டீரியா, வைரஸ் கிருமி தொற்றுகள் நம் கைகளில் இருந்து செல்போனிலு் ஒட்டிக் கொள்கின்றன. இதனால் வயிற்று போக்கு ஏற்படுவது, சருமத்தை பாதிக்கும் ஸ்டாபிலோகோசஸ், காசநோயை உண்டாக்கும் ஆக்டினோபாக்டீரியா, வலியுடன் கூடிய சிறுநீர் தொற்றை உண்டாக்கும் சிட்ரோபேக்டர் போன்ற நோய்க் கிருமிகள் பரவுகின்றன.

             போனில் உள்ள பிளாஸ்டிக் மீது இருக்கும் சில வகை வைரஸ்கள் ஒரு வாரம் வரை அதே இடத்தில் உயிர் வாழும் என்கிறார்கள். எனவே செல்போனை எடுத்துக் கொண்டு கழிப்பறைக்கு செல்லக் கூடாது. அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்திவிட்டுதான பயன்படுத்த வேண்டும். உண்ணும் போதும் மலம் கழிக்கும் போதும் செல்போன், டிவி உள்ளிட்டவை கூடவே கூடாது.