காய்கறி, மளிகை பொருட்களின் விலை உயர்வு

மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்

. சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும் சில மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி விலையை கேட்டாலே நெஞ்சு வலி வரும் அளவுக்கு பல மடங்கு விலை உயர்ந்துள்ளது.

மனிதர்களின் அடிப்படை தேவைகளில் முதலிடத்தில் உணவு உள்ளது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உணவு வகைகளை தயாரிக்க தேவைப்படும் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியல் ஒப்பிட்டு பார்த்தால் அதன் தாக்கம் தெரியவரும். கோவை மொத்த மளிகை பொருட்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் மளிகை பொருட்களின் விலை ஒரு மாதத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது. இவற்றில் சீரகம் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஒரே மாதத்தில் 460 ரூபாய் விலை அதிகரித்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் ஆர்எஸ்.கணேசன் கூறும்போது, ‘‘மளிகை பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. குறிப்பாக சோம்பு, கிராம்பு, சீரகம் விலை மிகவும் கடுமையாக உயர்ந்துள்ளது. இத்தகைய பொருட்கள் பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தான் கொண்டு வரப்படுகின்றன.

அறுவடை நேரத்தில் மழை பெய்த காரணத்தால் பொருட்கள் சேதமடைந்து வரத்து பெருமளவு குறைந்துள்ளது. இதுவே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். மொத்த மார்க்கெட்டை விட சில்லரை மார்க்கெட்டில் மேலும் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும். விலை உயர்வால் மக்கள் வாங்கும் அளவை குறைந்துள்ளனர். இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் என்பதால் இவற்றை வாங்குவதை தவிர்க்க முடியாது. எனவே மிகுந்த சிரமமப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.