காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை…

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருதய நோயினால் பாதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இருதய நோயினால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

இந்நிலையில் நேற்று இரவு அமைச்சர் செந்தில்பாலாஜி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் செந்தில்பாலாஜி ஜூன் 15-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய நோய் மூத்த மருத்துவர் ரகுராம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவரை சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்துள்ளனர்.

தற்போது அவருக்கு அறுவை சிகிச்சைக்கு முன்பு செய்ய வேண்டிய சோதனைகள் செய்யப்பட்டுவருகிறது. இந்த சோதனையின் அடிப்படையில் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி, ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் கொண்ட குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.