கிரெடிட், டெபிட், ப்ரீபெய்டு கார்டு நெட்வொர்க்கை மாற்றும் வசதி-புதிய விதியின் முக்கிய அம்சம் என்ன..?

கடந்த புதன்கிழமை இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் ப்ரீபெய்ட் கார்டுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை வெளியிட்டது. அதில் முதன்முறையாக ‘கார்டு போர்ட்டபிளிட்டி’ என்றொரு முக்கியமான அம்சத்தை ஆர்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு நெட்வொர்க்கை வாடிக்கையாளர்களே தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்துகொள்வது பற்றி அந்த வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் இது வங்கிப் பரிவர்த்தனைகளில் புரட்சிகரமான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

கார்டு நெட்வொர்க் போர்ட்டபிளிட்டி என்றால் என்ன? – கார்டு நெட்வொர்க் போர்ட்டபிளிட்டி என்றால் வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் மற்றும் ப்ரீபெய்ட் கார்டுகளை வழங்குவதைப் போலவே வாடிக்கையாளர்கள் அவர்கள் விரும்பிய வங்கி நெட்வொர்க்குக்கு தங்களுடைய கார்டு சேவைகளை மாற்றிக் கொள்ளலாம். எப்படி செல்போன் பயன்படுத்துவோர் நெட்வொர்க் போர்ட்டபிளிட்டி செய்து கொள்கிறார்களோ அதேபோல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய விருப்பத்துக்கு அல்லது வர்த்தக வசதிக்கு ஏற்றவாறு விரும்பிய நெட்வொர்க்கில் கார்டை பெற்றுக் கொள்ளும் வசதியே கார்டு போர்ட்டபிளிட்டி ஆகும்.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் நிதி சார்ந்த முடிவுகளை மேற்கொள்வதில் கூடுதல் சுதந்திரம் பெற இயலும் என வங்கித் துறை நிபுணர்கள் கூறுகின்றனர். அதேவேளையில், கார்டு போர்ட்டபிளிட்டியை பயன்படுத்த விரும்புவோர் தங்களின் பேமென்ட் ஹிஸ்டரியை சிறப்பாகப் பேணியிருப்பது அவசியம். ஒரு கார்டை முழுவதுமாகப் பயன்படுத்திவிட்டு, அதில் நிலுவைத் தொகையை செலுத்தாமல், அதிலிருந்து தப்பிக்க இதை மாற்றாகப் பயன்படுத்த முடியாது என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், இது தொடர்பாக வங்கிகள், நிதி நிறுவனங்கள், வாடிக்கையாளர் என சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அவ்வாறாகப் பெறப்படும் ஆலோசனைகள் அடிப்படையில் தேவைப்பட்டால் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். பின்னர், வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்த நடைமுறைக்கு வரும் என்றும் ரிசர்வ் வங்கி வரைவி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.