மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் அளிக்க வந்த விண்ணப்பதாரர்களிடமும், மகளிர் சுய உதவி குழுவினரிடமும் முதல்வர் கலந்துரையாடினார்.
தருமபுரி மாவட்டம் தொப்பூரில் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை வாரியாக, மாதந்தோறும் 1,000 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம், வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம் வாயிலாக, ஒரு கோடி பேருக்கு உதவித்தொகை வழங்க, 7,000 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.
இத்திட்டத்தில், பயனாளிகளை சேர்ப்பதற்கான விண்ணப்ப விநியோகம், ரேஷன் ஊழியர்கள் வாயிலாக நடந்து வந்தது. அவர்கள் வீடுதோறும் சென்று, விண்ணப்பங்களை வழங்கி வந்த நிலையில், இதற்கான முகாம் நேற்று முடிந்தது.
இதைத் தொடர்ந்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் சேலம் விமான நிலையத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக தொப்பூர் வந்தார். வழி நெடுகிலும் முதலமைச்சருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப முகாமை தொப்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் அளிக்க வந்த விண்ணப்பதாரர்களிடமும், மகளிர் சுய உதவி குழுவினரிடமும் முதல்வர் கலந்துரையாடினார். முகாமில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணிகளில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விண்ணப்பதாரர்களுக்காக இங்கு நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாமையும் முதல்வர் பார்வையிட்டார். மாநிலம் முழுதும், 35,923 இடங்களில் முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.