குரூப் பிரிவில் அதிக புள்ளிகள் பெற்றாலும் இந்தியா ‘ஏ2’ தான்: இது ஆசியக் கோப்பை கணக்கு!

எதிர்வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பிரிவில் அதிக புள்ளிகள் பெற்றாலும், இந்திய அணி குரூப் பிரிவு பட்டியலில் ஏ2-வில் தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அது என்ன கணக்கு என்பதை பார்ப்போம்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான ஜெய் ஷா அண்மையில் வெளியிட்டார். அதன்படி 6 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடர் ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் வரை நடைபெறுகிறது.

6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘குரூப் ஏ’ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் இடம் பெற்றுள்ளது. ‘குரூப் பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடம்பெற்றுள்ளது. குரூப் பிரிவில் இந்திய அணி அதிக புள்ளிகள் பெற்றாலும் ‘ஏ2’ என்றே அறியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பாகிஸ்தான் (ஏ1), இலங்கை (பி1), வங்கதேசம் (பி2) என அறியப்படும்.

நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றால் நாக்-அவுட் செய்யப்பட்ட அணிகளின் இடத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் 4 சுற்றில் ‘ஏ1 மற்றும் பி2’ அணிகள் விளையாடும் ஒரு போட்டி மட்டும் பாகிஸ்தானில் நடைபெறுகிறது அதனால், இந்த ஏற்பாடு என தெரிகிறது. ஏனெனில் பாகிஸ்தான் சென்று இந்திய அணி விளையாடாது என தெரிவித்துள்ளது.