பாலியல் உறவுக்கான சட்ட ஒப்புதல் வயதை 13-ல் இருந்து 16 ஆக உயர்த்தி ஜப்பான் நாடாளுமன்றம் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் பாலியல் உறவுக்கான சட்டத்தில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி அங்கு ஒப்புதலுடன் கூடிய பாலியல் உறவுக்கான வயது 13இல் இருந்து 16ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு குறைவானவர்கள் சிறார்கள் எனவும் இவர்கள் திருமணம் மற்றும் பாலியல் உறவுகள் கொள்வதற்கு சட்ட ஒப்புதல்கள் இல்லை என்ற சட்ட நடைமுறை பின்பற்றப்படுகிறது.
எனவே, 18 வயதுக்கு குறைவானவர்கள் விருப்பத்தின் பேரில் பாலியல் உறவில் ஈடுபட்டாலும் அதற்கு சட்ட ரீதியான ஒப்புதல் இந்தியாவில் கிடையாது. அதேவேளை, இங்கிலாந்தில் பாலியல் உறவுக்கான சட்ட ஒப்புதல் வயது 16 வயதாகவும், பிரான்ஸ்சில் 15ஆகவும், ஜெர்மனி மற்றும் சீனா போன்ற நாடுகளில் 14 வயதாகவும் உள்ளனர்.
இந்த நாடுகளில் குறிப்பிட்ட வயதை தாண்டிய சிறார்கள் அவர் அவர் சுய விருப்பத்தின்படி பாலியல் உறவில் ஈடுபட்டால் அது சட்ட விரோதம் இல்லை. இந்த சட்ட ஒப்புதல் நடைமுறையானது ஜப்பானில் தான் மிகக் குறைந்த வயதாக இதுவரை வைக்கப்பட்டிருந்தது. அந்நாட்டில் 1907 ஆண்டு முதல் 13 வயது அதற்கு மேற்பட்டோர் பாலியல் உறவில் ஈடுபட சட்ட ஒப்புதல் இருந்து வந்தது.
இந்த வயதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக மனித உரிமை அமைப்புகள் மூலம் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையை ஏற்று பாலியல் உறவுக்கான சட்ட ஒப்புதல் வயதை 13-ல் இருந்து 16 ஆக உயர்த்தி ஜப்பான் நாடாளுமன்றம் சட்டம் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் சிறார்கள் மீதான பாலியல் குற்றங்கள் குறைக்கப்படும், இத்தகைய குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.