குழந்தைகளுக்கான கால்சியம் சத்தை அள்ளித்தரும் உணவுகள்… தினம் ஒன்று கொடுங்கள்..!

பசுவின் பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருள்கள் கால்சியத்தின் சிறந்த மூலமாகும். குழந்தைக்கு பால் பிடிக்கவில்லை என்றால், அதற்கு மாற்றாக தயிர் மற்றும் பாலாடைக்கட்டி கொடுக்கலாம்.

தாய்மார்களைப் பொறுத்தவரை குழந்தைகளை மூன்று வேளையும் முறையாக சாப்பிட வைப்பது என்பதே மிகப்பெரிய சவாலான விஷயம். அப்படியிருக்கையில் அவர்கள் ருசித்து சாப்பிடக்கூடிய வகையில் சத்தான உணவுகளை தயார் செய்து கொடுக்க வேண்டிய கடமையும் தாய்மார்களையே சாரும். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் நிறைந்த உணவு என்பது மிகவும் அத்தியாவசியமானது. ஏனெனில் கால்சியம் தான் எலும்புகள், பற்கள் ஆகியவற்றை வலுவக்க உதவுகிறது.

பசுவின் பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருள்கள் கால்சியத்தின் சிறந்த மூலமாகும். குழந்தைக்கு பால் பிடிக்கவில்லை என்றால், அதற்கு மாற்றாக தயிர் மற்றும் பாலாடைக்கட்டி கொடுக்கலாம். ஆனால் பெரும்பாலான குழந்தைகளுக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொள்ள மாட்டேன் என அடம்பிடிப்பார்கள். இருப்பினும் குழந்தைகளின் உணவில் சிறிதளவு பால் இடம்பிடிப்பது போல் பார்த்துக்கொள்வது நல்லது.

குழந்தைகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்தான கால்சியம் சத்து நிறைந்துள்ள சில உணவுப்பொருட்கள் குறித்து பார்க்கலாம்..

  1. பாதாம்:

மூன்றில் ஒரு கப் பாதாம் பருப்பில் 110 மி.கி கால்சியம் உள்ளது. பாதாம் கால்சியத்தின் சிறந்த மூலமாகும், மேலும் இது நினைவாற்றல் மற்றும் மூளை சக்தியை அதிகரிக்கிறது. இதனை தண்ணீரில் ஊறவைத்து காலை வேளையிலோ அல்லது மொறு மொறுப்பான ஸ்நாக்ஸாக மாலை வேளையிலோ குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.

  1. சோயா:

சோயா கால்சியம் சத்து நிறைந்த மற்றொரு உணவாகும். இதனை குழந்தைகளின் அன்றாட உணவில் இருப்பது போல் பார்த்துக்கொள்ளலாம். சோயா பீன்ஸ், சோயா மில்க், தயிர், டோஃபு என பலவகையான பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சோயா மில்கின் மற்றொரு கூடுதல் நன்மை என்னவென்றால், லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம். மேலும் சோயாவில் கால்சியத்துடன் சேர்த்து இரும்பு, நார்ச்சத்து மற்றும் பாஸ்பரஸ் மெக்னீசியம் மற்றும் தயாமின் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

  1. பால் சார்ந்த பொருட்கள்:

பாலில் இயற்கையாகவே கால்சியம் சத்து நிறைந்துள்ளது. ஆனால் பல குழந்தைகளுக்கு பால் பிடிப்பது கிடையாது. எனவே பாலை தவிர்க்கும் குழந்தைகளுக்கு, சீஸ், பனீர் மற்றும் வெண்ணெய் போன்ற பால் பொருட்களை கொடுக்கலாம். இவையும் கால்சியத்தின் சிறந்த இயற்கை ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகின்றன.

  1. பட்டாணி:

ஒரு கப் பச்சை பட்டாணியில் 45 மி.கி கால்சியம் உள்ளது. இது குழந்தையின் சரியான எலும்பு வளர்ச்சி மற்றும் வலிமைக்கு உதவுகிறது. பட்டாணியில் வைட்டமின் கே உள்ளது, இது குழந்தைகளின் எலும்பு தாது அடர்த்தியை பராமரிக்க உதவுகிறது.

  1. ஆரஞ்சு:

ஒரு ஆரஞ்சு பழத்தில் 50 மி.கி கால்சியம் உள்ளது. இது கால்சியத்தின் நல்ல ஆதாரமாக இருந்தாலும், குழந்தைகளுக்கு புதிதாகப் பிழிந்த ஆரஞ்சு பழ சாற்றை மட்டுமே கொடுக்க வேண்டும், பேக்கேஜ் செய்யப்பட்ட ஜூஸை பெற்றோர்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

  1. பீன்ஸ்:

100 கிராம் பீன்ஸில் 113 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. குழந்தைகளுக்கு பீன்ஸ் பிடிக்காமல் போகலாம், ஆனால் இந்த கால்சியம் நிறைந்த காய்கறிகளை அவர்களுக்கு கொடுப்பது முக்கியமாகும். தாய்மார்கள் பீன்ஸை வைத்து பிள்ளைகளுக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து கொடுத்து சாப்பிடவைக்கலாம்.

  1. மீன்:

உங்கள் பிள்ளைக்கு மீன் மீது விருப்பம் இருந்தால், தினசரி உணவில் சிறிதளவு மீன் இருப்பது போல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் மீன் கால்சியத்தின் சிறந்த ஆதாரமாக உள்ளது. அதேபோல் குழந்தைகளுக்கு மீனை சாப்பிட கொடுப்பதற்கு முன்பே அதனை நன்றாக பரிசோதித்து, முள்ளை அகற்றிவிட்டு கொடுங்கள்.

  1. கேழ்வரகு:

100 கிராம் கேழ்வரகில் 344 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. கேழ்வரகு கால்சியம் செறிவு நிறைந்த சிறந்த தானியமாக கருதப்படுகிறது. ராகி மாவைக் கொண்டு கலி, கூழ், தோசை, சப்பாத்தி என குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய பல உணவு வகைகளையும் தயார் செய்யலாம்.

9.கீரைகள் :

கீரை வகைகள் கால்சியம் சத்து நிறைந்த மற்றொரு உணவுப்பொருளாகும். ஆனால் கீரைகளை குழந்தைகள் விரும்புவது கிடையாது. குழந்தைகள் விரும்பாவிட்டாலும், 100 கிராமுக்கு 99 மில்லி கிராம் கால்சியம் நிறைந்துள்ள இந்த அதிசய இலைகளை நீங்கள் அவர்களது உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

  1. முட்டை :

கால்சியம் சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் பட்டியலில், குறைந்தபட்சம் குழந்தைகள் விரும்பிச்சாப்பிடும் உணவாக முட்டை உள்ளது. முட்டையில் நிறைந்துள்ள கால்சியம் குழந்தைகளின் எலும்பு மற்றும் பற்கள் வலுவடைய உதவுகிறது. உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமை பிரச்சனை இல்லாத வரையில் தினந்தோறும் ஒரு முட்டையை உணவுடன் சேர்த்துக்கொடுக்கலாம்.